திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும் படிக்க - திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
முதல்வர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த டிச.31ம் தேதி அறிவித்தது.
இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3ம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10ம் தேதி என்றும், ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெறும். இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருவாரூர் இடைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்கித் தரப்பட வேண்டும் என்று கோரியும், அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மனுவை வரும் 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.