20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பதுதான் சரி என சசிகலா கூறினார் என்று பெங்களூரில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, ரங்கசாமி, டாக்டர்.முத்தையா, திருமதி.ஜெயந்தி பத்மநாதன், சுந்தர்ராஜ், திரு.முருகன், பாலசுப்பிரமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட 11 பேர் சசிகலாவை சந்தித்தனர்.
இதைத்தொடர்ந்து தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இடைத்தேர்தலை சந்திப்பது சரி தான், தைரியமாக தேர்தலில் போட்டியிடுங்கள் என சசிகலா கூறினார். 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பது நல்ல முடிவு என சசிகலா தெரிவித்தார்.
சர்கார் விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் அணுகுமுறை தவறானது. இதில் எந்த கட்சியும் சரியான அணுகுமுறையாக கடைபிடிக்கவில்லை. முக்கியமாக அரசு இதில் அவசரப்படுகிறது.
அதேசமயம் சர்கார் படத்தை நடுநிலையுடன் எடுக்கவில்லை. இலவச டிவியை எரித்திருந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அப்படி எல்லாம் செய்யாமல், திமுக பற்றி பேசாமல் இருந்துள்ளனர்.
இவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பது பெரிய அநாகரீகம்.
மக்களை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு மூலம் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடந்தது. அப்போதெல்லாம் போராடாத ஆளுங்கட்சியினர் சர்காருக்கு எதிராக போராடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.