மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இன்று (டிச.9)முதல் நாள் சட்டப்பேரவை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்ததையடுத்து டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நடப்பாண்டின் கடைசிக் கூட்டத்தொடரின் முதல் நாள் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அதில் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிரான தனித்தீர்மானம் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.