டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் பணிந்துள்ளது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைசர் மு.க. ஸ்டாலின், “மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நான் முதல்வராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க-வும் துணைபோக கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வின் முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி - எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் திட்டம் ரத்து என்பது அ.தி.மு.க-வின் முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம் என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்றதுடன், ஆதாரங்களுடன் நானும் பேரவையில் தி.மு.க-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க-வின் முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களின் உறுதியான போராட்டமும், தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தனித் தீர்மானமும் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போக இருந்த மத்திய பா.ஜ.க அரசின் முயற்சிகளை தவிடு பொடியாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு கிடைத்த வெற்றி, யாருக்கு வெற்றி என்று பேசக்கூடாது - திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன், “டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து மக்களுக்கு கிடைத்த வெற்றி, யாருக்கு வெற்றி என்று பேசக்கூடாது. தமிழக அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றியது. டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து வி.சி.க மனு அளித்திருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலித்து, மதுரை மாவட்டம் மேலூர் பகுதி கிராமங்களில், டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததற்காக, மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் நமது பாரதப் பிரதமரின் முடிவு, நமது விவசாயிகளின் நலனில் அவர் கொண்டுள்ள அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில், நமது பாசத்திற்குரிய பிரதமர் மோடி, சொன்ன சொல்லின்படி நடந்து கொள்வதை எடுத்துக் காட்டியிருக்கிறது.
மதுரை மேலூர் அம்பலக்காரர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து, அவர்கள் கோரிக்கையைப் பரிசீலித்ததற்காக, நமது மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டிக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்
“மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியை இனி வரும் காலங்களிலும் பாதுகாக்கும் வகையில் பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்ற எதிர்க் கட்சியினரின் பிரச்சாரம் பொய்த்துவிட்டது. அவர்களுக்கு டங்ஸ்டன் சம்பந்தமான மத்திய அரசின் அறிவிப்பு சரியான பாடம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “வெற்றி பெறும் வரை ஒன்றுபட்டு போராடிய பொதுமக்களுக்கும், மக்கள் உணர்வுகளை பிரதிபலித்த தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “டங்ஸ்டன் சுரங்க ஏலம் நிறைவடையும் வரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், திட்டத்துக்கு உறுதுணையாக இருந்த திமுக அரசை மதுரை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். புராதானச் சின்னங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவித திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், போராட்ட களத்தில் உறுதியாக நின்ற மக்களுக்கு கிடைத்த வெற்றி. மேலும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், டங்ஸ்டன் திட்டம் தமிழகத்தில் எங்கும் வராது என்று அறிவித்த மத்திய அரசுக்கும் பாராட்டு” என்று தெரிவித்துள்ளார்.