/indian-express-tamil/media/media_files/2025/06/18/raaja sanmuganathan-44a6a57d.jpg)
தூத்துக்குடி அதிமுக நிர்வாகி எஸ்.பி.எஸ். ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ஆவார்.
தனது சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி செய்த புகாரில் கைதாகி, மலேசியா தப்பிச் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் ராஜாவுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ராஜாவின் சகோதரி ஏ. பொன்னரசி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் அளித்த புகாரில், ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது பல தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பொன்னரசியின் "ஓம்மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்" நிறுவனத்தில் 16% பங்குகளை வாங்கித் தருவதாக ராஜா உறுதியளித்துள்ளார். இதற்காக, ஸ்ரீபெரும்புதூர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனது 2 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து பொன்னரசி கடன் வாங்கியுள்ளார்.
ஆனால், அவருக்குத் தெரியாமல், அந்தக் கடனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாயை ராஜா தனது மற்றொரு நிறுவனமான "அஷுன் எக்சிம்" நிறுவனத்திற்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொழில் தொடங்கப் போவதாகவும், முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் ராஜா பொன்னரசியிடம் கூறியுள்ளார். இதை நம்பி, பொன்னரசி தனது 300 சவரன் தங்க நகைகளை ராஜாவிடம் கொடுத்து அடமானம் வைக்கச் சொல்லியுள்ளார். அந்த நகைகளை வங்கியில் அடகு வைத்துப் பெற்ற பணத்தில், ராஜா தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 70 ஏக்கர் நிலத்தை தன் பெயரில் வாங்கியதாகவும், ஆனால் எந்த லாபத்தையும் தங்களுக்கு வழங்கவில்லை என்றும் பொன்னரசி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தம்பியின் நிறுவனத்தின் பங்குதாரர் பொறுப்பில் இருந்து தன்னையும், தனது கணவரையும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தனது மனைவி அனுஷாவை நியமித்ததாக ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட ஒரு கடிதத்தை தங்களுக்கு அனுப்பியதாகவும் பொன்னரசி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பொன்னரசியின் புகாரில் உண்மைத்தன்மை இருப்பதைக் கண்டறிந்த போலீசார், ராஜா வெளிநாடு தப்பிக்க வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதன் காரணமாக, ராஜா வெளிநாடு செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.