/indian-express-tamil/media/media_files/2025/01/23/JXZRPsWtBOTw5lrTcWgS.jpg)
Tuticorin Kamaraj College Environmental Awareness
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி, ஈஎஃப்ஐ (Environmental Foundation of India), மற்றும் வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் இணைந்து முத்துநகர் கடற்கரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கடற்கரை தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சி சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப்பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கடல் சூழல்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்விற்கு வருகை தந்தவர்களை காட்சி தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியர் மு.மாரீஸ்வரி வரவேற்றார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் சுகாதார அலுவலர் நெடுமாறன், சுவச் பாரத் மிஷன் மற்றும் அதன் முக்கிய திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தினார். சுத்தத்தினால் சமூக சுகாதாரம் மேம்படுவதும், இயற்கை வளங்களை பாதுகாப்பதும் முக்கியமானது என மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
பின்னர் பேசிய ஈஎஃப்ஐ திட்ட மேலாளர் எஸ். மகாராஜா, கடல்களும் அதன் உயிர்வளங்களும் குறித்த விரிவான விளக்கங்களை அளித்தார். அவர் கடல்களுக்கான முக்கியத்துவத்தை விவரித்ததோடு, இவை உலகின் வாழ்வாதாரத்துக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதையும் நுண்ணுயிர்களின் ஆதாரமாக எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் விளக்கினார்.
த. முத்து பட்டன், வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்டின் நிறுவனர், பிளாஸ்டிக் மாசு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து பேசினார். ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழல், கடல் உயிரினங்கள் மற்றும் மனித சுகாதாரத்திற்கு ஏற்படுத்தும் விளைவுகளை விவரித்தார்.
தொடர்ந்து காமராஜ் கல்லூரி காட்சி தொடர்பியல் துறையின் தலைவர் முனைவர் ம.சுரேஷ், காலநிலை மாற்றம், கடல் சூழல் மற்றும் ஆவணப்படங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவணப்படங்களை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்தார்.
கடற்கரை சுத்தம் செய்யும் பணி
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பின்பு, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முத்துநகர் கடற்கரையில் சுத்தம் செயல் பணியி ஈடுபட்டனர். தன்னார்வலர்கள் கையுறைகள் அணிந்து கழிவுகளை சேகரிக்க பைகளை பயன்படுத்தி, பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள் மற்றும் பிற மாசுபடுத்தும் பொருட்களை அகற்றினர்.
இறுதியாக காட்சி தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ். வைஷ்ணவி நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து மாணவி ஜூனா கூறும் போது, " கடற்கரை தூய்மை செய்யும் பணியானது மிகவும் புதிதாக இருக்கிறது. இதற்கு முன்னர் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றது இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.இதற்கு முன்பு இந்த கடற்கரையில் நானே குப்பைகளை போட்டிருக்கிறேன். தற்போது அது தவறு என உணர்கிறேன். இனிமேல் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன்" என்றார்.
மாணவர் பிரபு கூறும் போது, " இந்த நிகழ்விற்கு வந்து சுத்தம் செய்தது மன நிறைவை ஏற்படுத்தியது. இது போல் நிறைய நிகழ்வுகளை நடத்த வேண்டும்.மாற்றம் என்பது முதலில் நம்மிடம் இருந்து துவங்கட்டும்" என்று கூறினார்.
முத்து குமார் என்ற மாணவர் "நானும் எனது நண்பர்களும் இணைந்து பிளாஸ்டிக் மூடி, பிளாஸ்டிக் ஸ்புன் உள்ளிட்ட குப்பைகளை அதிகளவில் உள்ளன. இதனை சுத்தம் செய்தோம். நமது கடற்கரையை அசுத்தம் செய்து வைத்திருப்பதை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த நிகழ்வானது சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்கொள்வது மற்றும் கடற்கரையின் இயற்கை அழகை பாதுகாப்பதன் அவசியத்தை சுட்டிக்காட்டியது.”, என்றார்.
இந்நிகழ்ச்சி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தியதுடன், கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து செயல்பட்டால் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதை காட்டியது.
மாணவர்கள் சிறு மாற்றங்களின் மூலம் பெரிய மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதை அறிந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.