தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றவாளியை பிடிக்க முயன்றபோது வெடிகுண்டு வீச்சில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சித்துள்ளார். இதனிடையே, டிஜிபி திரிபாதி தமிழகத்தில் போலீஸாருக்கு உரிய பாதுகாப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை பகுதியை சேர்ந்த துரைமுத்து என்பவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளதால் அவரை கைது செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் காவலர்கள் நேற்று வல்லநாடு அருகே ஒரு காட்டுப் பகுதிக்கு சென்றனர்.
அங்கே காவலர்கள் துரைமுத்துவை கைது செய்ய முயன்றபோது துரைமுத்து அங்கிருந்த காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்ப முயன்றார். நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவலர் சுப்ரமணியன் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்தார். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
காவலர் சுப்பிரமணியன் உடல் அவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளையில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடியில், குற்றவாளியை பிடிக்க முயன்றபோது வெடிகுண்டு வீச்சில் பலியான காலர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!
அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல்- காவலர்களின் பாதுகாப்பினை தமிழகக் காவல்துறை உறுதி செய்திட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) August 19, 2020
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். அ.தி.மு.க ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல், காவலர்களின் பாதுகாப்பினை தமிழக காவல்துறை உறுதி செய்திட வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உருவப்படடத்துக்கு திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி திரிபாதி, “காவலர்கள் உயிரிழந்தால் இழப்பீடு பெற்றுத்தருவதில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. வழக்குகள், சம்பவங்களின் அடிப்படையில் இழப்பீடு அளிக்க அரசுக்கு பரிந்துரைக்கிறோம். அதன்படி தற்போது சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி காவல்துறை சார்பிலும் உதவிகள் வழங்கப்படும். தமிழகத்தில் போலீசாருக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறது.
இதனால்தான், பொதுமக்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. காவல்துறையினரின் பாதுகாப்புக்கு தேவையான பாதுகாப்பு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளதுடன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஏதோ ஓரிரு சம்பவங்கள் இப்படி துரதிர்ஷ்டமாக நடைபெற்றுவிடுகிறது. குற்றவாளிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளவும், கையாளவும் காவலர்களுக்கு நவீன ஆயுதங்களுடன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
காவலர்கள் தங்கள் உடல்நிலைகளையும், குடும்பங்களையும் பாராமல் மக்களுக்கு சேவையாற்றுகிறார்கள். அவர்களை குறித்து யார் எது சொன்னாலும் நாங்கள் கவலைப்படுவதில்லை. ஒருசில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது என்று டிஜிபி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.