கனமழையின் காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் விளைவாக சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்று (டிச 14) மாலை 6.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் பயணிகள் ரயில் (06667) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இன்று இரவு 08.25 மணிக்கு மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி செல்லும் பயணிகள் ரயிலும் (06847) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர்த்து சில ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயில் இன்று மாலை 5.15 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில் இரவு 8.25 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி - பாலக்காடு விரைவு ரயிலும் இரவு 10 மணிக்கு மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“