ரஜினிகாந்தை யார் நீங்கள்? என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடக்கோரி நடந்த 100 ஆவது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 13 பேரும் அப்பாவி பொதுமக்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று(31.5.18) தூத்துக்குடி விரைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொருவரையும் நலம் விசாரித்தார். ரஜினியை பார்த்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இந்நிலையில்,சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் என்ற இளைஞரை ரஜினி நலம் விசாரித்தார். அப்போது அந்த இளைஞர், ரஜினியை பார்த்து யார் நீங்கள்? என்று கேட்டார். அதற்கு ரஜினிகாந்த “நான்தான்பா ரஜினிகாந்த்” என்று பதில் அளித்தார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அத்துடன், மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து சந்தோஷம் புதிய விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ ரஜினிகாந்திடம் யார் நீங்கள்? 100 நாட்களாக ஏன் வரவில்லை என தான் கேட்ட நோக்கம் வேறு; ஊடகமும், மீம்ஸ் கிரியேட்டர்களும் அதனை வேறு மாதிரி திசை திருப்பி விட்டார்கள். மற்ற அரசியல் தலைவர்களை விட ரஜினிகாந்த் என்ற பெயருக்கே தனி மதிப்பு இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோவால் தனிப்பட்ட முறையில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்” என இளைஞர் சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார்.