தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் பேரணியாக சென்றபோது துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆணையம் 19 கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளது.
அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிறப்பித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.
தலைவர்கள் வரவேற்பு
மகத்தான தீர்ப்பு – ஸ்டாலின் : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மனித குலத்தினை காத்திடும் மகத்தான தீர்ப்பு என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சீமான் வரவேற்பு : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. ஆலை திறப்பதற்கான தடை தொடரும்! – என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.பல ஆண்டுகளாக பல கட்ட மக்கள் போராட்டத்திற்கு பிறகு 13 பேர் உயிரை விலையாக கொடுத்து இந்த தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் : ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பி்ட்டுள்ளார்.
மக்களின் குரல் என்றும் வெல்லும் – கமல் : மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு ஒரு சான்று. நீதிமன்ற தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி.தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை அருகில் இருந்து உணர்ந்தவன் நான் என்று நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி வரவேற்பு : தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துவதாக திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு கிடைத்த வெற்றி – வைகோ : ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நீதி கிடைத்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tuticorin sterlite factory re open case chennai high court verdict