செய்தியாளர் ஷாலினி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி, ரூ3 லட்சம் நிவாரண உதவியை ஷாலினி குடும்பத்திற்கு அறிவித்தார்.
ஷாலினி, சென்னையில் மாலைமுரசு டி.வி.யில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். துடிப்பான இளம் செய்தியாளரான இவர் நேற்று (ஜூலை 15) திண்டுக்கல் அருகே கார் விபத்தில் பலியானார்.
ஷாலினியின் ஏழ்மையான குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என செய்தியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு இன்று ஷாலினி குடும்பத்திற்கு ரூ3 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி இது தொடர்பாக விடுத்த அறிக்கை வருமாறு: ‘மாலைமுரசு செய்தியாளர் ஷாலினி, சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஷாலினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஷாலினியின் ஆன்மா இறைவன் திருவடியில் இழைப்பாற இறைவனை வேண்டுகிறேன். ஷாலினியின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ3 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறேன்’ என கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த இரங்கல் அறிக்கை: ‘மாலைமுரசு தொலைக்காட்சியின் நிருபர் ஷாலினி அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அதுவும் அவரது பிறந்தநாளன்று உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
ஷாலினி அவர்களது இழப்பால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.’ இவ்வாறு ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்த அறிக்கை: ‘மாலைமுரசு தொலைக்காட்சியில் செய்தியாளரான செல்வி R.ஷாலினி சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்திகேட்டு ஆற்றோனா துயரம் கொள்கிறேன்.
துடிப்புமிக்க, செய்தியாளராக அவர் பணியாற்றிய விதமும், ஊடகங்களோடு இணைந்து அவர் கேட்கும் கேள்விகளும், அவரின் தனித்த அடையாளங்கள். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மாலைமுரசு தொலைக்காட்சி நிறுவன குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு பகல் பாராது ஓய்வின்றி பணியாற்றும் செய்தியாளர்கள், உரிய பாதுகாப்போடும், கவனத்தோடும் தங்களது சாலை பயணங்களை அமைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.