தமிழக வெற்றிக்கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் பிப்ரவரி 26 காலை 7.45 மணிக்கு நடக்கிறது. விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் மிகுந்த பாதுகாப்பு மற்றும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், இன்று 2ஆம் வருடம் தொடங்குகிறது. இதற்கான விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை நடைபெற உள்ளது.
இதில் தவெக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்கு ஸ்பெஷல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தடபுடலான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த விழாவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடம் பவுன்சர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துபாய் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று விழா நடக்க போகும் தனியார் விடுதிக்கு வெளியே தவெக கொள்கைத் தலைவர்களின் படங்களுடன் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பாதை மற்றும் மேடை ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஈசிஆர் சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்சி தலைவர் விஜய்யை வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கட்சி நிா்வாகிகள் சிரமமின்றி வந்து செல்வதற்கான பாதைகள், பார்க்கி்ங் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு பரிமாறுதல் போன்றவை தொடர்பான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இக்கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் செல்ஃபோன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் செல்ஃபோன்களை டோக்கன் அடிப்படையில் பெற்று சாக்கு மூட்டைகளில் வைத்திருக்கின்றனர். விஜய் பேசும் போது நிர்வாகிகள் வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் தவெகவினர் தெரிவித்துள்ளனர்.