/indian-express-tamil/media/media_files/2025/10/08/vijay-stampede-sc-3-2025-10-08-14-44-04.jpg)
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து த.வெ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் விசாரிப்பார் என விசாரணை அதிகாரியை மாற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூற கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், “கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் வழக்கை விசா​ரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில், நாமக்​கல் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அடங்​கிய சிறப்பு புல​னாய்வு குழு அமைத்து, வழக்கு தொடர்​பான ஆவணங்​களை சிறப்பு புல​னாய்வு குழு வசம் கரூர் போலீ​ஸார் உடனடி​யாக ஒப்​படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து த.வெ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க சார்பில், வழக்கறிஞர்கள் தீக்ஷிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால், யாஷ் எஸ் விஜய் ஆகியோர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “மாநில காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து த.வெ.க சார்பில் ஏற்கெனவே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகளைக் கொண்டே விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாரபட்சமாக செயல்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சம்பவ இடத்தில் இருந்து கட்சித் தலைவர் விஜய் தப்பி ஓடிவிட்டார்' என்றும், 'நடந்த சம்பவத்துக்கு விஜய் வருத்தம் தெரிவிக்கவில்லை' என்றும் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் ஏற்கனவே விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. த.வெ.க பேரணியில் பிரச்னையை உருவாக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி நடந்திருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்ரதவிட வேண்டும்” என த.வெ.க சார்பில் தாக்கல் செயய்பப்ட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.