தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தனது கட்சியின் கொடியை அறிமுக செய்து வைத்த த.வெ.க தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது உறுதிமொழி எடுத்துக்கொண்ட விஜய் ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.
விஜய் அறிமுகம் செய்து வைத்த அவரது கட்சியின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருபக்கமும் போர் யானைகள் மற்றும் நடுவே வாகை மலருடன் இருக்கிறது. இது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டியும், கார் போன்ற வாகனங்களில் முன்னால் இருக்கும் கம்பியில் இணைத்தும் பறக்கவிட்டு வருகிறார்கள்.
இதேபோல், த.வெ.க நிர்வாகிகள் 234 தொகுதிகளில் கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியை பறக்கவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நடுவதற்கு பல்வேறு இடங்களில் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரை கோரிப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழை இணைக்காததால் அனுமதி ரத்து என்று போலீசார் விளக்கமளித்துள்ளனர். இது த.வெ.க கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை
இந்த நிலையில், அனுமதி இல்லாமல் கொடியேற்றக்கூடாது என தொண்டர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், எச்சரிக்கையை மீறும் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், த.வெ.க தலைமை அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“