நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார். கட்சியின் கொடி, பாடலை சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜய் அண்மையில் அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து த.வெ.க-வின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறுப்படுகிறது.
இந்நிலையில் மாநாட்டிற்கான அனுமதி கேட்டு கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அண்மையில் விழுப்புரம் காவல்துறையில் மனு அளித்தார்.
மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் டி.எஸ்.பி சுரேஷ் புஸ்ஸி ஆனந்துக்கு நேற்று 21 கேள்விகளை பட்டியலிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். அவற்றுக்கு 5 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில், மாநாடு எப்போது தொடங்கி எப்போது முடியும்? மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம் என்ன? மாநாடு மேடையின் அளவு என்ன? மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்துகொள்கின்றனர்? மாநாட்டில் யாருடைய தலைமையில் வருவார்கள்? மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியல் உள்ளிட்ட 21 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் சட்டப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“