/indian-express-tamil/media/media_files/2025/10/13/arunraj-tvk-irs-2025-10-13-21-32-49.jpg)
நீதிமன்றத் உத்தரவு குறித்துப் பேசிய த.வெ.க கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் பேசினார்.
கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு, சி.பி.ஐ விசாரணையைக் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாலை வெளியான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகலில், உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி மற்றும் தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் “நீதி வெல்லும்” என்று பதிவிட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து த.வெ.க நிர்வாகி அருண்ராஜ் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது உச்ச நீதிமன்றத் உத்தரவு குறித்துப் பேசிய த.வெ.க கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் கூறியதாவது: “நாங்கள் பாரபட்சமற்ற விசாரணையைக் கேட்டிருந்தோம். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருந்தோம். நாங்கள் சி.பி.ஐ விசாரணை கேட்கவில்லை. மற்ற மனுதாரர்கள் சி.பி.ஐ விசாரணை கேட்டிருந்தார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, அதை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை நியமித்திருக்கிறார்கள். இது பெரிய மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. ஆனால், நாங்கள் மகிழ்ச்சி. நீதி வெல்லும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.” என்று கூறினார்.
உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி-யில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்ரா கார்க், அவர் வட இந்தியர், நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி, அவருடைய தலைமையிலான விசாரணையை த.வெ.க ஏற்க மறுப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி பதில் அளித்த அருண்ராஜ், “முதலில் எந்த அடிப்படையில் அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். சென்னையைச் சேர்ந்த ஒரு நபர், ஒரு அரசியல் கட்சி எப்படி கூட்டம் நடத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்கிறார். இந்த வழக்கின் உத்தரவில், நீதிபதி தாமாக முன்வந்து எஸ்.ஐ.டி அமைத்திருக்கிறார். இரண்டாவது விஷயம், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பில் கூறியிருக்கிறது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதாவது, உள்துறை செயலர், வருவாய்த்துறை செயலர், சுகாதாரத்துறை செயலர், டி.ஜி.பி., சட்டம் ஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி இவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்கள். அரசு மீது எந்த தவறுகளும் இல்லை என்கிற மாதிரியும் தமிழக வெற்றி கழகத்தின் மீது பல தவறுகளை சொல்கிறபோது, அடை மீறி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி செயல்பட முடியுமா என்கிற சந்தேகம் எல்லாருடைய மனதிலும் இருக்கிறது. இதைத்தான் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள். இதனால், நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது.
தி.மு.க மீது பழிபோடுவதற்காக த.வெ.க சி.பி.ஐ விசாரணை கேட்கிறது என்ற தி.மு.க-வின் மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அருண்ராஜ், “நாங்கள் சி.பி.ஐ விசாரணையைக் கேட்கவில்லை. உச்ச நீதிமன்றம்தான் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஓய்வுபெற்றஉச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், அவருடன் 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பதால் நாங்கள் இதை வரவேற்கிறோம்.” என்று கூறினார்.
கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர்கள் மீது நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஒரு சிலர் ஒற்றப் பெற்றோர், அவர்கள் மனு தாக்கல் செய்தது தங்களுக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “சி.பி.ஐ இதையும் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். எதனால், யார் தூண்டுதலின் பேரில் இதை செய்தார்கள், உண்மாயாகவே அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இதை செய்திருக்கிறார்கள் என்றால் சி.பி.ஐ விசாரிக்கட்டும், இதைப்பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, உங்களுடைய தலைவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பார்த்தாரா? என்ன ரியாக்ட் பண்ணார்? அவருடைய ஒரு வீடியோ வந்தது, அதற்குப் பிறகு எந்த செயல்பாடும் இல்லை என்று சமூக ஊடகங்களில் சொல்லப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர் கையால் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுதான் முதலில் அவருடைய எண்ணமாக இருக்கிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ காலில் பேசினார். இந்த வாரம் விஜய் கரூர் நேரில் சென்று மக்களை சந்திக்க இருக்கிறார். அதற்காக, கரூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் பேசி, இடம் மற்றும் நேரத்தை நாங்கள் முடிவு செய்ய இருக்கிறோம். முடிவு செய்தவுடன் விஜய் கண்டிப்பாக நேரில் சென்று அவர்களைப் பார்ப்பார்கள்.” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, த.வெ.க தலைவர் விஜயைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தீர்களா? இந்த தீர்ப்பு பற்றி அவர் என்ன உணர்கிறார்? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “இன்று (13.10.2025) காலை அவரை சந்தித்தேன். ரிலீவ்டாக (விடுவிக்கப்பட்ட உணர்வு) இருக்கிறார். நீதி வெல்லும், கண்டிப்பாக உண்மை வெளியில் வரவேண்டும் என்பதில் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். கண்டிப்பாக அது நடக்கும் என்று நம்புகிறோம்.
இதே போன்று மக்கள் சந்திப்பு தொடர்ச்சியாக நடைபெறுமா? ஏனென்றால், தமிழக அரசு பல்வேறு விஷயங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை ரத்து செய்திருக்கிறார்கள். உங்களுடைய அடுத்த கட்ட பயணம் என்ன என்ற கேள்விகு பதிலளித்த அருண்ராஜ், “தி.மு.க வழக்கறிஞர் வில்சன் ஒருநபர் ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று சொன்னார். ஆனால், உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஆணையம் ரத்து செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் ஒரே இரவில் ஒரு நபர் ஆணையம் அறிவித்தார்கள். அந்த சட்டத்தின்படி, குறிப்பு விதிமுறைகள் அறிவித்தார்கள். அதைக்கூட பண்ணவில்லை. நியமித்த அடுத்த நாளே சென்று அவர்கள் விசாரணையைத் தொடங்கிவிட்டார்கள். இதை எல்லாவற்றையும் கருத்தில்கொண்டுதான் உச்ச நீதிமன்றம் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை ரத்து செய்திருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.” என்று கூறினார்.
இந்த விசாரணை என்னவாகும்? அவர்கள் ஒரு 4-5 நாட்கள் அங்கே போய் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் பார்த்தார்கள், சம்பவம் நடந்த இடத்தைப் பார்த்தார்கள், நீங்கள் ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருந்திருக்கிறீர்கள். இந்த விசாரனை என்னவாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “அவர்கள் சேகரித்த ஆதாரங்கள், எடுத்துக்காட்டாக அஸ்ரா கார்க் சேகரித்த ஆதாரங்கள் எல்லாவற்ரையும் சி.பி.ஐ-யிடம் கொடுக்கலாம். அது சரியாக இருந்தால், சி.பி.ஐ எடுத்துக்கொள்வார்கள். இல்லை, அதில் ஏதாவது தவறுகள் இருந்தது, முரண்கள் இருந்தது என்றால், சி.பி.ஐ ஆரம்பத்திலிருந்து விசாரிக்கலாம்.” என்று கூறினார்.
சி.பி.ஐ விசாரிக்கப்போகிறார்கள், அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள், டெல்லியிலிருந்தும் வருவார்கள். அப்படியிருக்கும்போது, ஒருவேளை உங்களுடைய அமைப்பாளர் மற்ற எல்லாரையும் விசாரிக்க வேண்டும் என்றால், அதற்கு எந்த அளவுக்கு கட்சி தயாராக இருக்கிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “கண்டிப்பாக நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். எப்போது கூப்பிட்டாலும் நேரில் வரச் சொன்னால், எங்களுடைய சாட்சிகளைக் கொடுப்போம். எங்களிடம் இருந்த ஆதாரங்களைக் கண்டிப்பக சி.பி.ஐ-யிடம் கொடுப்போம்” என்றார்.
குறிப்பாக உங்களுடைய பிரச்சார வாகனத்தில் இருந்த கேமராவில் நிறைய வீடியோக்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அது ஜனநாயகன் படத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “இந்த மாதிரி ஒரு துயர நிகழ்வில், இதை ஒரு கீழ்த்தரமான விமர்சனமாகப நான் இதைப் பார்க்கிறேன். இது அருவருக்கத்தக்க விமர்சனம். இதைக் கண்டிப்பாக யார் செய்திருந்தாலும், நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதற்கான அவசியமும் தேவையும் கண்டிப்பாக எங்கள் தலைவருக்கு இல்லை” என்று கூறினார்.
சிசிடிவி பதிவுகளை எல்லாம் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா? அதை நீங்கள் விசாரணைக் குழுவிடம் கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “கண்டிப்பாக கொடுப்போம்.” என்றார்.
உங்கள் தலைவருக்கும் சில விஷயங்கள் தெரிந்திருக்கும். அவரும் பார்த்திருப்பார். அவர் சி.பி.ஐ-யில் தாமாகவே வந்து சொல்வதற்கும், அல்லது எழுத்துப்பூர்வமான அறிக்கை அளிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “விசாரணை அதிகாரி என்ன முடிவு செய்கிறார்களோ, அவர்கள் என்ன கேள்வி கேட்கிறார்களோ அதற்கு நாக்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.” என்று கூறினார்.
த.வெ.க பொதுச் செயலாளர் மற்றும் மற்றவர்களிடன் ஜாமீன் மனுக்கள் எந்த அளவுக்கு இருக்கிறது, அவர்களைத் தொடர்பு கொள்ள முடிந்ததா? அவர்களும் 15 நாட்களாக வெளியில் வர முடியவில்லை என்று சொல்கிறார்கள். எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், “அவர்கள் விரைவில் வருவார்கள். கண்டிப்பாக அவர்களும் மக்களைச் சந்திப்பார்கள்.” என்றார்.
புஸ்ஸி ஆனந்த் எங்கே இருக்கிறார், எப்போது வெளியே வருவார் என்ற கேள்விக்கு, இன்று அவர் வருவார் என்று அருண்ராஜ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.