Advertisment

த.வெ.க. கொடியில் யானை: பி.எஸ்.பி. எதிர்ப்பு; சிக்கலில் விஜய்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், தமிழக வெற்றிக் கழகக் கொடியில் யானை சின்னத்தை சட்டப்படி பயன்படுத்த முடியாது என்றும், யானை சின்னம் பயன்படுத்தியது தொடர்பாக தங்களது தலைமையுடன் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVK flag Bahujan Samaj Party to complain Actor Vijay in trouble Tamil News

தனது கட்சியின் கொடி இன்று வியாழக்கிழமை காலை அறிமுகப்படுத்தப்படும் என விஜய் அறிவித்த சூழலில், அதனை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைத்தார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். 

Advertisment

இதன்பிறகு 10,12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 சட்டமன்ற தொகுதிவாரியாக முதல் மூன்று இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் பாராட்டு விழா நடத்தி விஜய் அவர்களை நேரில் கவுரவித்தும் வருகிறார். 

இந்நிலையில், தனது கட்சியின் கொடி இன்று வியாழக்கிழமை காலை அறிமுகப்படுத்தப்படும் என விஜய் அறிவித்த சூழலில், அதனை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைத்தார். அவர் தனது கையில் கட்சியை கொடியை ஏற்றி, உறுதிமொழி ஏற்றது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை குஷிப்படுத்தியுள்ளது. மேலும், விஜயின் பெற்றோர் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற கட்சியின் பாடலையும் வெளியிட்டார். இதன் மூலம், தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறார் த.வெ.க கட்சித் தலைவர் விஜய். 

இந்நிலையில், விஜயின் த.வெ.க கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருபக்கமும் போர் யானைகள் மற்றும் நடுவே வாகை மலருடன் இருக்கிறது. கட்சிக் கொடியின் அர்த்தத்தையும் அதன் பின்னால் இருக்கும் வரலாற்றையும் கட்சியின் முதல் மாநாட்டில் தெரிவிப்பதாக விஜய் கூறியிருந்தார். 

எதிர்ப்பு 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகக் கொடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் நீல நிறத்தில் யானை சின்னம் இடம்பெற்றிருக்கும். விஜய் கட்சிக் கொடியிலும் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், தமிழக வெற்றிக் கழகக் கொடியில் யானை சின்னத்தை சட்டப்படி பயன்படுத்த முடியாது என்றும், யானை சின்னம் பயன்படுத்தியது தொடர்பாக தங்களது தலைமையுடன் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக ஆனந்தன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ” கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.

உண்மை இப்படி இருக்க, இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Vijay Tamilaga Vettri Kazhagam Bahujan Samaj Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment