தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. விஜய் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். மொத்தமாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம். கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது? தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர். இன்னைக்கு தமிழகம் இருக்கும் சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்க எல்லோரும் புரிந்து வைத்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அரசியல் என்றால் என்னங்க, ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்பது அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டி நல்லா கொழுக்க வேண்டும் என்று நினைப்பது அரசியலா? எல்லோரும் நல்லா வாழ வேண்டும் என்பது தான் அரசியல். அது தான் நம்ம அரசியல்.
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம், தினம் மக்கள் பிரச்னையை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னர் ஆட்சி போல நடத்துகிற இவர்கள் செய்யும் செயகள் ஒன்றா, இரண்டா? மாநாட்டில் ஆரம்பித்தும், இன்றைக்கு பொதுக்குழு வரைக்கும் எங்கு எல்லாம், எப்படி எல்லாம் தடைகள். அத்தனையும் தாண்டியும் மக்கள் சந்திப்புகள் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும். ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ரமேஷ் இவர்கள் எல்லாம் போட்டு அடி, அடி என்று அடிக்கிறார்கள். நாமும் அப்படி போட்டு அடிக்கணுமா என்று மனதிற்குள் யோசனையாக தான் இருக்கிறது.
மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் காட்ட வேண்டும். ஒன்றியத்தில் பா.ஜ., ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லும் நீங்கள் மட்டும் என்ன செய்றீங்க? அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஆட்சி தானே நடத்துகிறீர்கள்? என் கட்சியினரையும் மக்களையும் சந்திக்க தடை போட நீங்கள் யார்?
தடையை மீறி என் மக்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன் என்றால் போயே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஒரே காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதல்வர் ஆக கனவு காண்கிறான் என்கிறீர்களே? அது நடக்கவே நடக்காது என்றும் சொல்றீங்க. அப்படியெனில் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எனது கட்சிக்கு போடுகிறீர்கள்?
அணை போட்டு ஆற்றை தடுக்கலாம் காற்றை தடுக்க முடியாது. தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக மாறும். சக்தி மிக்க புயலாக மாறும். எனது அருமை தமிழக வெற்றிக்கழக தோழர்களே, நாம் மாநாட்டில் ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொன்னேன். அதை தான் இங்க திரும்பவும் சொல்கிறேன். இந்த மண், பிளவு வாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண்.
இங்க நீங்கதான் இப்படி என்றால் அங்க அவங்க. யாரு? உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேல, மாண்புமிகு மோடிஜி அவர்களே. என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு என்னவோ பயம் மாதிரியோ, அப்படி ஒரு விஷயத்தை சொல்றது. பேர சொல்லணும், பேர சொல்லணும். சென்டரில் ஆளுகிறவங்கன்னு சொல்றோம். சென்டரில் யார் ஆளுறா? காங்கிரசா? இங்க ஸ்டேட்ல ஆள்றாங்கன்னு பேசுறோம். இவங்க யார் ஆள்றா, அ.தி.மு.க-வா? அப்புறம் என்ன பேர சொல்லணும், பேர சொல்லணும்... புரியலையே?
ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிக்கறதுக்காக உங்களோட அதாவது பா.ஜ.க.வோட மறைமுக கூட்டணி. இப்படி உங்க பேரை சொல்லியே மக்களை ஏமாத்துறதும், உங்க பேரை சொல்லியே மக்களை பயப்படுத்துறதும். இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடும், தமிழர்கள் என்றாலே அலர்ஜி?
தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க. இங்க படிக்கிற பிள்ளைகளின் படிப்புக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறீங்க.. ஆனால் மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டோட பாராளுமன்ற தொகுதியில் கை வைக்க பார்க்குறீங்க.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிடிச்சி பிரதமர் சார். உங்க ப்ளான் என்னன்னு? எங்கெல்லாம் எப்படியெல்லாம் எந்த திசைக்கெல்லாம் இந்த நாட்டை கொண்டு போகலாம்ன்னு.
சார் உங்ககிட்ட நாங்க சொல்லிக்கிறது எல்லாம். தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பலபேருக்கு தண்ணி காட்டுன்ன ஸ்டேட் சார். பலபேருக்கு தண்ணி காட்டின்ன ஸ்டேட் சார். பாத்து சார், பாத்து செய்ங்க சார். மறந்துடாதீங்க சார்.
இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும். என்று அவர் கூறினார்.