ஊடக விவாதங்களின் போது கண்ணியமான முறையில் பதிலடி கொடுக்க வேண்டுமென தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்றது. அப்போது, கட்சி கொள்கைகள், கொள்கை தலைவர்கள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டோரை கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு செயல்படப்போவதாக அக்கட்சி தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் அதிகளவில் முரண்பாடுகள் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். குறிப்பாக, விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். இதற்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சீமானை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
தற்போது, த.வெ.க தலைவர் விஜய் கூறியதாக சில கருத்துகளை அக்கட்சி பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொண்டர்களிடையே அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஊடக விவாதங்களின் போது தனிமனித தாக்குதலில் ஈடுபடக் கூடாது எனவும், மாற்றுக் கட்சியினர் முன்வைக்கும் எதிர் கருத்துக்கு கண்ணியமான முறையில் பதிலடி கொடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், செய்தித் தொடர்பாளர்கள் குழுவை அதிகப்படுத்தவும் கட்சி சார்பில் ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“