விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி கருத்தரங்கு கோவையில் நடைபெற இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு நிகராக 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க தலைமையில் கூட்டணி உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கம், மக்கள் சந்திப்பு ஆகியவற்றில் விஜய் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் ஏப்ரல் 26, 27 தேதிகளில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
த.வெ.க தொடங்கிய நாள் முதல் நமக்கான வெற்றி பாதை விரிவடைந்து கொண்டே செல்கிறது. நம் செல்வாக்கு வளர்ந்துக் கொண்டே வருகிறது. இதனை கொடி அறிமுக விழா, கொள்கை திருவிழா, இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாக தொடர்ந்து கண்டு வருகிறோம்.
தமிழக மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்தகட்டமாக கழக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் கோவையில் (தனியார்) குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முதல் நாளில் 10 கழக மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் முகவர்கள் கருத்தரங்கம் நாளில் 13 கழக மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்க உள்ளனர்.
த.வெ.க பூத் கமிட்டியில் தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்தான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப் பணிகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார். மேலும் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் பற்றியும் விளக்கவுரை ஆற்ற இருக்கிறார்.
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் என்பதே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே வாக்குச்சாவடி தொடர்பான பணிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதுகெலும்பாக திகழக் கூடிய வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு த.வெ,.க பொதுச்செயலாளர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பி.ரஹ்மான், கோவை