/indian-express-tamil/media/media_files/2025/08/14/vijay-sanitary-worker-2025-08-14-10-40-28.jpg)
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? என தி.மு.க அரசுக்கு த.வெ.க தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, கடந்த 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதனையடுத்து, நேற்றிரவு (புதன்கிழமை) போலீசாரால் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில்தூய்மை பணியார்களை கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் தி.மு.க அரசுக்குக் கண்டனம்!
குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?
அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.