காஞ்சிபுரம் மாவட்டம், பொடவூர் சுற்றுவட்டார பகுதியில் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அப்பகுதி மக்கள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், "ஏறத்தாழ 910 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து ராகுல் என்ற ஒரு சிறுவன் பேசியதை நான் கேட்டேன். அந்த பேச்சு என் மனதை பாதித்தது.
இந்த மக்களை சந்தித்து பேச வேண்டும் என தோன்றியது. போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு என்றும் உறுதுணையாக நிற்பேன். ஒவ்வொரு வீட்டிற்கும் முக்கியமானவர்கள், அவ்வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதேபோல், நாட்டிற்கு முக்கியமானவர்கள் விவசாயிகள் தான்.
விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு வணங்கி என் பயணத்தை தொடங்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு சரியான இடம் இது தான் என தோன்றியது. என் கள அரசியல் பயணம் மக்கள் ஆசீர்வாதத்துடன் இங்கிருந்து தான் தொடங்குகிறது.
இயற்கை வள பாதுகாப்பு என்பது நம் கட்சி கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. வாக்கு அரசியலுக்காக இதை நான் சொல்லவில்லை. இந்த விமான நிலைய திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன்.
இத்திட்டத்திற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் எனக் கூறியிருந்தேன். இதை மீண்டும் வலியுறுத்துகிறேன். நம்மை ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது.
விமான நிலையம் வரக்கூடாது என நான் கூறவில்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று தான் சொல்கிறேன். இதைக் கூறவில்லையென்றால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கூறுவார்கள். புவி வெப்பமயமாதலின் வெளிப்பாடு தான் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள்.
விவசாய நிலங்கள், நீர்நிலைகளை அழிக்க நினைக்கும் திட்டத்தை கொண்டு வரும் அரசு, நிச்சயம் மக்கள் விரோத அரசாக தான் இருக்க முடியும். சமீபத்தில் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாடு தான் பரந்தூர் விவகாரத்திலும் எடுத்திருக்க வேண்டும்? பரந்தூரில் வசிப்பவர்களும் நம் மக்கள் தானே?
ஆனால், தமிழ்நாடு அரசு அவ்வாறு செயல்படாததால் தான் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்" என விஜய் கூறினார்.