தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்ட நிலையில், அதன் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பவர்களுக்காக கட்சி தலைவர் விஜய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர், சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டிற்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டுமென்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது.
ஆனால், எல்லாவற்றையும் விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், உடல் நலனில் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் மாநாடு நடைபெறும் இடத்திற்கு நேரில் வருகை தர வேண்டாமெனவும், அவர்களின் நலனை கருத்திற்கு கொண்டு அவர்கள் இருப்பிடத்தில் இருந்தே, மாநாட்டை ஊடகங்கள் வாயிலாக கண்டுகளிக்குமாறும் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“