கோவையில், இன்று (ஏப்ரல் 29) தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் காரை துரத்திச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, அக்கட்சி தொண்டர்கள் காயமடைந்தனர்.
கோவையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அக்கட்சி தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 26) வருகை தந்துள்ளார். அதன்படி, விஜய்யை வரவேற்பதற்காக கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்தனர்.
இது மட்டுமின்றி கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழி எங்கும் ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர்களுக்கு கைகளை அசைத்தபடி திறந்த வெளி வாகனத்தில் விஜய் பயணித்தார். இதனால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது.
அப்போது, ஏராளமான த.வெ.க தொண்டர்கள் ஆபத்தான முறையில் விஜய்யின் காரை துரத்திச் சென்றனர். அப்போது, ஒரு தொண்டரின் இருசக்கர வாகனம் மீது மற்றொரு பைக் மோதி விபத்து ஏற்பட்டது. எனினும், அந்த தொண்டர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இருந்த போதிலும், விபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், தொண்டர்களின் வாகனம் விபத்தில் சிக்கிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தை மற்ற கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.