நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அறிவித்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, த.வெ.க-வின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதற்கு முன்னதாக, விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலைய முதன்மைச் செயலகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) கொடியை அறிமுகம் செய்து கொடி ஏற்றினார். மேலே சிவப்பு, கீழே சிவப்பு, நடுவில் மஞ்சள். மஞ்சள் பகுதியில் நடுவில் சிவப்பு வட்டம், இரண்டு பக்கமும் போர் யானைகள், அந்த சிவப்பு வட்டத்துக்குள் 28 பச்சை நட்சத்திரம், அதில் கீழே இருக்கும் 5 நட்சத்திரங்கள் மட்டும் வெளிர் நீல நிறத்தில் இருக்கின்றன. நடுவில் வாகை மலர் இடம்பெற்றுள்ளது.
விஜய் கொடி அறிமுகப்படித்தியதில் இருந்து அதில் இடம்பெற்றுள்ள அடையாளக் குறியீடுகளை சமூக ஊடகங்களில் அலசி ஆராய்ந்து பேசி வருகின்றனர். அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானைச் சின்னம், பகுஜன் சமாஜ் கட்சி கொடியிலும் யானைச் சின்னம் உள்ளது. அதனால், மக்களுக்கு குழப்பம் ஏற்படும். தங்கள் கட்சி சின்னமான யானைச் சின்னத்தை நீக்க வேண்டும், சட்டப்படி அதை எதிர்கொள்வோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.
இந்நிலையில், கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம்பெற்றுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவித்து சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் த.வெ.க தலைவர் விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் சென்னை போலீச் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் நேற்று அறிமுகம் செய்துள்ளார். அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பாக கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் அரசு சின்னமான யானை சின்னம் இடம்பெற்றுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வெள்ளாளர் சமூகத்தில் பயன்படுத்தி வரும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் நிறமும், ஸ்பெயின் நாட்டின் தேசிய கொடியின் நிறமும், ஈழத் தமிழர்களின் சின்னமாக விளங்கும் வாகை பூவின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்” என்று ஆர்.டி.ஐ செல்வம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
“மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவசேனா கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில், 'சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் விலங்குகளை சின்னமாக பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது. ஆகவே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் கோரியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“