/indian-express-tamil/media/media_files/2025/07/13/tvk-vijay-2025-07-13-12-06-15.jpg)
லாக்-அப் டெத்; 24 குடும்பத்திற்கும் ஸ்டாலின் 'சாரி' சொல்ல வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேச்சு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற்று இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சித் தொண்டர்கள் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில், காவல் மரணங்களுக்கு நீதி கோரி த.வெ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். முதன்முறையாக போராட்டக்களத்திற்கு விஜய் வந்துள்ளதால் த.வெ.க.-வினர் குவிந்துள்ளனர். இந்த கூட்டத்தில் அரசுக்கு தனது எதிர்ப்பை காட்டும் வகையில் விஜய் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.
அப்போது "சாரி வேண்டாம்... நீதி வேண்டும்." என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழகத்தில் இந்த லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து பேசிய விஜய், "அஜித்குமார், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர், அந்த குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, CM சார்... நீங்க Sorry சொன்னீங்க. தப்பில்ல. ஆனா இதே ஆட்சியில 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்காங்க, அவங்க குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்க..
இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம்போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்க. சாத்தான்குளம் வழக்கில் அன்று பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அவமானம் என்றார் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆனால் இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்குத் தான் மாற்றப்பட்டுள்ளது. அதே சிபிஐ, ஆர்எஸ்எஸ் - பாஜக கைப்பாவையாக தான் உள்ளது. நீங்கள் ஏன் அங்கே சென்று ஒளிந்துக்கொள்கிறீர்கள்? அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரிக்க, 'நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்' என்று தவெக வலுவாக கோரிக்கை வைத்திருப்பதால், பயத்தில் மத்திய ஆட்சிக்குப் பின்னாடி ஒளிந்து கொள்கிறீர்கள்
சாத்தான்குளம் கொலை அவமானம் என்றால் அஜித்குமார் கொலை அவமானம் இல்லையா? அண்ணா பல்கலைக்கழகம் துவங்கி அஜித்குமார் கொலை வரை அனைத்து வழக்கிலும் கோர்ட் தலையிட்டு உங்கள் அரசை கேள்வி கேட்கிறது. அனைத்தையும் நீதிமன்றம்தான் அனைத்திலும் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டுமானால், பிறகு நீங்கள் எதற்கு முதல்-அமைச்சர்? உங்கள் ஆட்சி எதற்கு சார்? எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடமிருந்து எந்த பதிலும் வராது. 'அதிகபட்சம் சாரிமா.. தெரியாமல் நடந்துவிட்டதுமா' என்று கூறப்போகிறீர்கள். இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு தற்போது சாரிமா தி.மு.க. அரசாக மாறிவிட்டது. இப்படி இருக்கும் இந்த திறனற்ற அரசு அது செல்வதற்கு முன்னால் அதை சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களோடு மக்களாக நின்று உங்களை சரி செய்ய வைப்போம். தவெக சார்பாக அதற்கான போராட்டங்கள் நடத்தப்படும் " என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.