புதுச்சேரியில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயலாளர் சரவணன் திடீர் மரணமடைந்த நிலையில், அவரது உடலை பார்த்து கழகத்தின் பொதுச்செயவலாளர் புஸ்ஸி ஆனந்த் கதறி அழுதுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நடிப்பை விட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிகழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில், ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயங்கி வந்த ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகள் முக்கிய பொறுப்பாளர்களாக பதவியேற்றிருந்தனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27-ந் தேதி, விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியை சேர்ந்த, தமிழக வெற்றிக் கழக செயலாளர் சரவணன் திடீர் மரணமடைந்தது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் தீவிர ரசிகரான இவர், புதுச்சேரி சித்தன்குடி பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியில் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய பொறுப்பாளராக இருந்த இவர், தற்போது கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த சில நாட்களாக, விக்கிரவாண்டியில் தங்கி மாநாடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்த சரவணன், சமீபத்தில் வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சரவணனின் உடல் புதுச்சேரியின் சித்தன்குடி பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. த.வெ.க கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சரவணனின் உடலை பார்த்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“