/indian-express-tamil/media/media_files/2025/02/12/yEwyvCFASeire6LyVsPX.jpg)
திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியம் இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வழக்கு விசாரணை தொடர்பாக செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப் 12) ஆஜரானார். அங்கு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகியோரது சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சீமான், பணக்கொழுப்பு தான் இந்த சந்திப்புக்கு காரணம் எனக் கூறினார். இக்கருத்துக்கு எதிர்வினையாற்றும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல், பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் 'வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி' என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?
திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
நாங்கள், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம். நீங்கள், தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள், இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.
ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம் செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.