விழுப்புரத்தில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக காவல்துறை எழுப்பிய கேள்விகளுக்கு த.வெ.க பதில்களை சமர்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அரசியல் கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை அறிமுகப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து, கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டார். இருப்பினும் இது தொடர்பாக விஜய் சில பிரச்சினைகளை எதிர்கொண்டார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்திருந்தார். அப்போது, காவல்துறை தரப்பில் 32 கேள்வி எழுப்பப்பட்டன. மேலும் நிபந்தனைகளுடன் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்தது. இதனையடுத்து, தற்போது மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், அடுத்த மாதம் (அக்டோபர்) 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று விஜய் அதிகாரபூர்வமாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். குறிப்பிட்ட தேதியில் மாநாட்டை நடத்த இயலாத சூழலில், தற்போது புதிய தேதியை விஜய் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மாநாடு நடத்துவதற்கு காவல்துறை விதித்த 32 நிபந்தனைகள் மற்றும் கேள்விகளுக்கான பதில் கடிதத்தை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யிடம் இன்று புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
அப்போது மாநாட்டின் தேதி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான கடிதத்தையும் காவல்துறையிடம் த.வெ.க. வழங்கியுள்ளது. கடிதத்தில், “செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி வழங்கி இருந்தீர்கள். ஆனால், மாநாடு நடத்த எங்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை. ஆகவே, மீண்டும் அக்டோபர் 27 ஆம் தேதி மாநாடு நடத்த எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மாநாட்டிற்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகளுடன் ஆலோசித்து மனு குறித்து முடிவு எடுப்பதாக அவருக்கு காவல் துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநாடு நடைபெறும் திடலுக்கு எதிரே வாகனம் நிறுத்தும் இடத்தை அமைக்க காவல்துறை வலியுறுத்திய நிலையில், த.வெ.க. மாநாடு நடக்கவுள்ள பகுதியிலேயே வாகன நிறுத்தத்திற்காக புதிதாக 27 ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.