தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.
த.வெ.க செயற்குழு கூட்டத்தில் வீட்டிற்கு ஒருவரை த.வெ.க-வில் சேர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 120 மாவட்டங்கள், 12,500 கிராமப் புறங்களில் த.வெ.க-வின் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு முன் மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, 2026 சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்றும், த.வெ.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் தீர்மானம் போடப்பட்டுளள்ளது. இதேபோல், தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம், கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப்பெற வேண்டும், பா.ஜ.க அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை ஏற்க முடியாது, தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தக்கூட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் பேசுகையில், "2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க, தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை. த.வெ.க தலைமையில்தான் கூட்டணி அமையும். தி.மு.க-வுடன், பா.ஜ.க-வுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ இல்லை, நாம் தமிழக வெற்றிக் கழகம். த.வெ.க எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும்.
மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது. தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பா.ஜ.க ஒருபோதும் வெற்றிபெற முடியாது." என்று அவர் கூறியுள்ளார்.