/indian-express-tamil/media/media_files/2025/09/26/screenshot-2025-09-26-162156-2025-09-26-16-22-15.jpg)
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அதன் தலைவரும், நடிகருமான விஜய் கடந்த சில வாரங்களாக திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகை என தமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் தேர்தல் பிரசாரம் செய்த நிலையில், நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்களை சந்தித்து பிரச்சாரங்களில் ஈடுபடவிருக்கின்றார். அதன்படி, நாமக்கல், கரூர் பகுதிகளில் பிரச்சாரங்கள் எந்த இடத்தில் நடைபெறும், எந்த நேரத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூரில், வேலுச்சாமிபுரம் பகுதியில், நண்பகல் 12.00 மணிக்கும் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரமும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் மக்கள் சந்திப்புக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திருச்சியில் கூட்டம் பெருமளவில் திரண்டதால் அரியலூர் பிரச்சாரத்துக்குப் பின்னர் பெரம்பலூரில் அவரால் மக்களை சந்திக்க இயலவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.20) அன்று நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
விஜய் தமிழக சுற்றுப்பயணத்தைத் தொடங்கி 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டார். அவருக்கான கூட்டம் குறைவில்லாமல் இருப்பது கவனம் பெற்றுள்ளது. அதேவேளையில் அவரது பேச்சு மீது அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. அதனால் தவெக தொண்டர்கள் பலரும் கரூர், நாமக்கல்லில் அவரின் பேச்சின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
நாமக்கல்லில் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். சேலம் சாலையில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர். நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கரூரில் இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படாத நிலையில், தற்போது கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
கடும் நிபந்தனைகளுடன் விஜய்க்கு நாமக்கல், கரூர் பகுதிகளில் அனுமதி கொடுத்திருக்கும் காவல்துறை விஜய் வாகனத்தை தொடர்ந்து வர யாருக்கும் அனுமதி இல்லை எனவும் காவல்துறை தெரிவித்திருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.