/indian-express-tamil/media/media_files/2025/09/27/tvk-vijay-campaign-in-karur-tamilaga-vettri-kazhagam-vijay-speech-tamil-news-2025-09-27-22-25-24.jpg)
"தி.மு.க குடும்பம் ஊழல் செய்யும் பணத்தை 24 மணி நேரமும் விநியோகிக்கும் ஏடிஎம் மிஷின் ஆக செந்தில் பாலாஜி இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்." என்று விஜய் தெரிவித்தார்.
விஜய் தனது மூன்றாம் கட்ட பிரச்சாரமாக இன்று நாமக்கல், கரூர் மாவட்டத்திற்கு சென்றார். நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் முடித்த பிறகு கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில் விஜய் இரவு 7:15 மணியளவில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். வேலுச்சாமி புரத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:-
அமராவதி ஆற்றங்கரையில் உள்ள கரூரை பற்றி பெருமையாக சொல்ல நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் சமீப நாட்களாக இந்தியாவிலேயே கரூர் என்று சொன்னாலே ஒரு பெயர் தான் பிரபலமானது. அதற்கு யார் காரணம் என்று சொல்லித் தெரிய தேவையில்லை.
கரூர் மாவட்டத்தில் பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம், என்று சொன்னார்கள் ஆனால் பேரிச்சை மரம் கூட தேவையில்லை பேரிச்சை விதைகளையாவது இவர்கள் கண்ணில் காட்டினார்களா? கரூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று சொன்னார்கள் ஆட்சியே முடியப் போகிறது இப்போது ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. அமைச்சரே இதுதான் உங்க டக்கா? (பேசிக் கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ்க்கு வழி விட சொன்ன விஜய் தன்னுடைய பேச்சை சில வினாடிகள் நிறுத்தினார்).
ஆம்புலன்சில் கூட நம்ம கொடி தான்.... (கூட்டம் ஆரவாரம்; கூட்டத்தில் தண்ணீர் கேட்ட மக்களுக்கு வாகனத்தில் இருந்தபடியே தண்ணீர் வழங்கிய விஜய், கூட்டத்தில் மயங்கிய ஒருவரை ஆம்புலன்ஸ் ஏற்ற அறிவுரை)
விமான நிலையம் கட்டினால் இங்கு உள்ள ஜவுளி தொழில்கள் முன்னேறும் என்பது உண்மையான விஷயம் தான். ஆனால் பரந்தூர் போல மக்கள் பாதிக்காத வண்ணம் இடங்களை தேர்வு செய்து விமான நிலையம் கட்டினால் நல்லது. கரூரின் தீராத தலைவலியாக மணல் கொள்ளையும், கல்குவாரிகளும் கரூரின் கனிம வளத்தை அழித்துக் கொண்டிருக்கிறது இதற்கு காரணம் யார் சி.எம் சார். 11 மணிக்கு பதவி ஏற்பு நடந்தால் 11.05-க்கு மணல் கொள்ளை செய்யலாம் என்று வெளிப்படையாக பேசியவர்கள் தானே தி.மு.க-வினர். 2026 இல் மணல் கொள்ளை அடிப்பவர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று எண்ணும் ஆட்களிடம் இருந்து காவிரி தாய்க்கும் கரூருக்கும் விடுதலை வேண்டுமா? வேண்டாமா? நிச்சயம் கிடைக்கும் கவலைப்பட வேண்டாம்.
தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி பஞ்சப்பட்டி ஏரி. ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள பஞ்சப்பட்டி ஏரி நல்லா இருந்தா விவசாயிகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ஆனால் அதனை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளது இந்த அரசு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் போது பஞ்சப்பட்டி ஏரிக்கு உயிர் வரும், உங்கள் முகத்தில் சந்தோஷம் நிம்மதி எல்லாம் திரும்ப வரும். ஜவுளி தொழில் கரூர் நகரை வளர்த்திருக்கிறது இருந்தாலும் மக்களை பாதிக்காத வண்ணம் ஜவுளி தொழில்கள் இருந்து அதிலிருந்து வெளியேறும் கழிவுகளை அறிவியல் பூர்வமாக சுத்திகரித்து நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலை மக்களிடம் உள்ளது இதனை தீர்க்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் அலசி ஆராய்ந்து தவெக முன்னெடுக்கும்.
(மீண்டும் ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி தரக்கோரி மக்களிடம் விஜய் கோரிக்கை) கரூரின் முக்கிய பிரச்சனைக்கு காரணமான ஒருவர் பற்றி பேசாமல் போனால் நல்லாவா இருக்கும். ( பாட்டிலுக்கு 10 ரூபா பாடல்) கரூர் மாவட்டத்தில் மந்திரியாக இருந்தவர் இப்போது மந்திரியாக இல்லை ஆனாலும் மந்திரி மாதிரி செயல்படுகிறார். கரூரில் சமீப நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 30 பேர் விழா மன்னிக்கணும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மாஜி மந்திரியை பெருமையாக பேசியதை நாம் காதில் கேட்டிருப்போம் ஆனால் இதே முதலமைச்சர் கரூருக்கு எதிர்க்கட்சித் தலைவராக வந்த போது மாஜி மந்திரி குறித்து என்னவெல்லாம் பேசினார் சொன்னார் என்பதை பேக்ட் செக் நண்பர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை யூடியூப் திறந்து பார்த்தாலே அனைவருக்கும் தெரியும்.
தி.மு.க-வுக்கு இந்த மாஜி மந்திரி தற்போது என்னவாக இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா? தி.மு.க குடும்பம் ஊழல் செய்யும் பணத்தை 24 மணி நேரமும் விநியோகிக்கும் ஏ.டி.எம் மிஷின் ஆக செந்தில் பாலாஜி இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
காவல்துறையின் கைகள் இங்கு கட்டப்பட்டுள்ளது. மக்கள்தான் எஜமானர்கள் அவர்களுக்கு மட்டும்தான் பயப்பட வேண்டும் இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும் காட்சியும் மாறும் அதிகாரம் கைமாறும் மக்களுக்கான மக்களாட்சி அமையும் அப்போது தெரியும்.
நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.