தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமான விஜய், எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், மத்திய பா.ஜ.க ஆட்சியையும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியையும் விமர்சித்து பேசினார். பெரியார் போன்ற தமிழ் சின்னங்களின் சித்தாந்தங்களை தனது கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றும், ஆனால் "கடவுள் எதிர்ப்பு நிலை" இல்லாமல் இருக்கும் என்றும் விஜய் அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Unveiling roadmap, Vijay embraces Periyar but not his ‘anti-God position’, slams ‘corrupt family politics’
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி நகரில் நடந்த சூப்பர் ஸ்டார் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
விஜய் ஒரு உருவகத்துடன் பேச்சைத் தொடங்கினார், பாம்பை எதிர்கொள்ளும் குழந்தையுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசி பலத்த கைதட்டல்களைப் பெற்றார்.
"நான் அரசியலில் ஒரு குழந்தை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்த குழந்தை பாம்பை (அரசியலை) கையில் பிடிக்க தயாராக உள்ளது” என்று விஜய் கூறினார். பின்னர் விஜய் விரைவாக உருவகத்திலிருந்து நகர்ந்து, "எங்கள் அரசியல் திட்டம் 'பக்கா செயல்திட்டம்' என்று அறிவித்தார்.
விஜய் தன்னை ஒரு திரைப்பட நட்சத்திரமாக மட்டும் காட்டிக் கொள்ளாமல், மாநிலத்திற்கான புதிய போக்கை வகுக்கும் தலைவராகக் காட்டிக் கொண்டு, தமிழகத்தின் நிறுவப்பட்ட அரசியல் ஒழுங்கிற்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார்.
எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், "ஊழல் குடும்ப அரசியல்" மற்றும் "பிளவுபடுத்தும், சாதிவெறி மற்றும் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல்களுக்கு" எதிராக விஜய் பேசினார். விஜய் த.வெ.க.,வின் இலக்குகளுக்கும் மற்றவர்களின் "பிற்போக்கு நடைமுறைகளுக்கும்" இடையே வேறுபாட்டைக் காட்ட முயன்றார்.
“மதம், சாதி, அடையாளங்களின் அடிப்படையில் நம்மைப் பிரிக்கும் பிரிவினை சக்திகள் மட்டும் நமக்கு எதிரிகள் அல்ல. ஊழல் சக்திகளும் எதிர்க்கப்பட வேண்டும். பிளவுபடுத்தும் சக்திகளை அடையாளம் காண்பது எளிது என்றாலும், ஊழல்வாதிகளைக் கண்டறிவது கடினம். அவர்கள் மழுப்பலானவர்கள் - சித்தாந்தத்தில் சொற்பொழிவாளர்கள், அவர்களின் நடிப்பில் நாடகத்தன்மை இருக்கும், மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே அறிவித்துக் கொள்கிறார்கள். அவர்கள் முகமூடி அணிந்துள்ளனர். அவர்களின் முகமே முகமூடிகள். இத்தகைய போலி சக்திகள் இன்று நம்மை ஆள்கின்றன. ஆம், பிளவுபடுத்தும் மற்றும் ஊழல் சக்திகள் நமது எதிரிகள்,” என்று விஜய் கூறினார்.
விஜய் ஒரு நுட்பமான சமநிலையை அடைந்து, அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் அளவுக்கு வெளிப்படுத்தினார், ஆனால் விமர்சனங்களை மறைமுகமாக வைத்து, பஞ்ச்லைன்களால் கவர் செய்திருந்தார்.
ஒரு கட்டத்தில், விஜய் மாநில அரசை குறிவைத்தார், இது "மக்கள் விரோத அரசாங்கம்" என்று கூறி, இது "அதன் சமூக நீதி நற்சான்றிதழ்களை பொய்யாக அணிவகுத்துச் செல்கிறது" என்று கூறினார்.
மக்கள் விரோத அரசை நடத்துகிறார்கள், திராவிட மாடல் அரசு என்று சொல்லி மக்களை முட்டாளாக்குகிறார்கள். இடைநிறுத்தி, "அவர்கள் 'பாசிசம், பாசிசம், பாசிசம்' என்று போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்கள். அப்படியானால் நீங்கள் பாயாசமா?” என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட விரும்பவில்லை என்று விஜய் தெளிவுபடுத்தினார். “நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக இங்கு வரவில்லை. கண்ணியமான அரசியல் தாக்குதல்கள் மட்டுமே,” என்று விஜய் கூறினார்.
மாநிலத்தில் உள்ள பல அரசியல்வாதிகள் தங்கள் அனல் பறக்கும் பேச்சுகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், விஜய்யின் கட்டுப்பாடான பேச்சு, அவரது பாணியை அரசியல் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகக் குறிக்கும் முயற்சி என்று தோன்றியது.
அந்த உரையில், முக்கிய தமிழ்த் தலைவர்களின் பாரம்பரியத்தில் த.வெ.க.,வின் கருத்தியல் சார்புகளை விஜய் நிலைநிறுத்தினார். திராவிடர்களின் அடையாளமான ஈ.வெ.ராமசாமி பெரியார், முன்னாள் முதல்வர் க.காமராஜ், அரசியல் சாசன சிற்பி பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களை விஜய் குறிப்பிட்டார்.
சமூக நீதி, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் த.வெ.க.,வின் கருத்தியல் கவனம் இருக்கும் என்று விஜய் அறிவித்தார்.
இருப்பினும், திராவிட இயக்கங்கள் போல் மதத்தை நிராகரிப்பதில் இருந்து த.வெ.க.,வின் மாறுப்பட்ட நிலையையும் விஜய் வலியுறுத்தினார். பெரியாரின் “கடவுள் எதிர்ப்பு நிலை” தவிர, மற்ற அனைத்தையும் த.வெ.க பெரியாரிடம் இருந்து எடுத்துக் கொள்ளும் என்று விஜய் கூறினார்.
“பெரியார் சொன்ன ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்ள மாட்டோம் - கடவுள் எதிர்ப்பு நிலை. கடவுளை மறுக்கும் அரசியலில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று விஜய் கூறினார்.
தற்போதுள்ள அரசியல் தகவல்தொடர்புகளின் பாணியையும் பொருளையும் குறிவைத்து, பழக்கமான, பெரிதும் கட்டமைக்கப்பட்ட அரசியல் உரைகளின் வடிவம் இனி எதிரொலிக்காது என்று விஜய் பரிந்துரைத்தார். "உலக இலக்கியத்தை மேற்கோள் காட்டவும், எம்.பி3 (MP3) ஆடியோ பிளேலிஸ்ட் போன்ற உரையை வழங்கவும் நான் இங்கு வரவில்லை," என்று விஜய் கூறினார், "அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டும் மாற வேண்டுமா? இல்லை, அரசியலும் மாற வேண்டும்” என்றும் விஜய் கூறினார்.
அரசியலில் ஈடுபடும் திரைப்பட நடிகர்களை நிராகரிக்க அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தையான “கூத்தாடி” என்ற சொல்லையும் விஜய் கொண்டு வந்தார். “தளபதி என்று நீங்கள் அழைத்தாலும், நானும் சிலருக்கு வெறும் கூத்தாடிதான்,” என்று கூறிய விஜய், “கூத்தாடிகள் உண்மையைச் சொல்வார்கள்” என்றார். எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஆந்திராவின் என்.டி.ராமராவ் போன்ற நடிகராக இருந்து அரசியல்வாதிகளாக மாறியவர்களைப் பற்றியும் விஜய் பேசினார்.
கல்வி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் நிகழ்ச்சி நிரலை வகுத்த விஜய், கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் தூய்மையான அடிப்படை ஆதாரங்களுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான சீர்திருத்தங்களுடன் சேர்த்து, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்புத் துறையை நிறுவ முன்மொழிந்தார். அனைவருக்கும் சம வாய்ப்புகளைப் பெறுவதற்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை முக்கிய முன்னுரிமையாகக் காட்டி, ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.
விஜய் தனது கட்சியை ‘திராவிட சித்தாந்தத்தில்’ இருந்து விலக்கி வைக்க முயன்றார்.
"திராவிடமும் தேசியமும் நமது சித்தாந்தத்தின் இரு கண்கள்" என்று கூறிய விஜய், பாரம்பரிய திராவிட விழுமியங்கள் மற்றும் பரந்த தேசிய பிரச்சனைகளுக்கு இடையே ஒரு பாலமாக த.வெ.க இருக்கும், அவற்றுக்கு இடையே ஒன்றை தேர்ந்தெடுப்பதை விட அவற்றை ஒருங்கிணைக்கும் பாலமாக த.வெ.க இருக்கும் என்று கூறினார்.
பேச்சு முடியும் தருவாயில், விஜய்யின் கண்கள் 2026 மாநிலத் தேர்தல்களில் உறுதியாக இருந்தது. "ஒவ்வொரு வாக்கும் அணுகுண்டு போல இங்கு விழும்" என்று விஜய் கூறினார்.
தேர்தலில் த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை வழங்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த விஜய், சாத்தியமான கூட்டணி கட்சிகளுக்கு கதவைத் திறந்து வைக்க முயன்றார். "எங்களுடன் யார் வந்தாலும் எங்கள் அரசாங்கத்தில் அதிகாரத்தில் பங்கு இருக்கும்," என்று விஜய் கூறினார். அ.தி.மு.க.,வுக்கு இது ஒரு மூலோபாய நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது, இப்போது த.வெ.க முதன்மை, மதச்சார்பற்ற, தி.மு.க எதிர்ப்பு சக்தியாக உருவானால், அ.தி.மு.க மேலும் அடித்தளத்தை இழக்கும் வாய்ப்பை எதிர்கொள்கிறது.
50 வயதான விஜய் தனது உரையை நிறைவுசெய்து, “மக்களாகிய உங்களை நம்பி, எனது திரைப்பட வாழ்க்கையின் உச்சத்தை கைவிட்டு வந்துவிட்டேன்” என்றார்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க முறையே 75 மற்றும் 50 ஆண்டுகால பாரம்பரியத்தை வைத்திருக்கும் அதே வேளையில், பா.ஜ.க தேசிய அரசியலில் நங்கூரமிட்டு நிற்கிறது, குறிப்பாக 2026 தேர்தல்கள் வரை ஆரம்ப உற்சாகத்தைத் தாண்டி ஒரு இயக்கத்தைத் தக்கவைப்பதில் த.வெ.க கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.