தமிழ்த் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அரசியல் களத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள அவர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் அரசியல் மாநாட்டை நடத்தினார். அதன்பிறகு, விகடன் குழுமம் நடத்திய நிகழ்வில் முதல்முறையாக பொதுமேடையில் உரையாற்றினார் விஜய்.
அவரது பேச்சும், அதனைத் தொடர்ந்து வெளியாகி வரும் அவரின் அறிக்கைகளும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார் விஜய். அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே, கூட்டணி தொடர்பான பேச்சுகளுக்கு எழுந்து வருகிறது.
விகடன் குழும விழாவில் பேசியதன் எதிரொலியாக வி.சி.க-வின் துணை பொதுச் செயலாளராக செயலாற்றி வந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்மையில் அவர் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்தார். இதேபோல், அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகியான சி.டி நிர்மல் குமாரும் த.வெ.க-வில் இணைந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு நபர்களும் விஜய் முன்னிலையில் தங்களை த.வெ.க-வுடன் இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
இத்தகைய சூழலில், த.வெ.க தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து விஜய், பிரசாந்த் கிஷோருடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியின் உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும் தேர்தலுக்கான பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விஜய்-பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்தார்.
இதனிடையே, மார்ச் முதல் வாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.