/indian-express-tamil/media/media_files/2024/10/28/R6MVRfbuxQkJpFMZZWhq.jpg)
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வரும் மே 30-ம் தேதி விஜய் மாமல்லபுரத்தில் சந்தித்து பாராட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களிப் பெற்ற மாணவ, மாணவிகளை ஆண்டுதோறும் சந்தித்து பாராட்டி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வரும் மே 30-ம் தேதி விஜய் மாமல்லபுரத்தில் சந்தித்து பாராட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்பே, கடந்த 2023-ம் ஆண்டில் இருந்தே நடிகர் விஜய், 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து சென்னைக்கு வரவழைத்து பரிசு அளிப்பது வழக்கம். அப்போது விஜய் நாள் முழுவதும் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயின் இந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் பெரிய அளவில் பேசப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர், விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த ஆண்டு மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் என்றே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறி வந்தனர்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து, மே 19-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை விஜய் விரைவில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின்படி முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலைத் தயார் செய்து தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டும் தேதியை நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் நேரில் அழைத்து பாராட்ட உள்ளார்.
— TVK Party HQ (@TVKPartyHQ) May 26, 2025
முதற்கட்டமாக, மே 30, 2025 வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பின்வரும் மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுவார்கள். மாணவச் செல்வங்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் அன்பும் அக்கறையும் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் இந்த விழாவில் மாணவச் செல்வங்களுக்கு, அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்களும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 88 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.