/indian-express-tamil/media/media_files/2025/09/15/screenshot-2025-09-15-150629-2025-09-15-15-06-52.jpg)
TVK Vijay Election rally
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சியினரும் தீவிரமான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்டமாக, கடந்த சனிக்கிழமை (செப். 13) அன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரப்புரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், திருச்சி மற்றும் அரியலூர் என இரு மாவட்டங்களில் மட்டுமே பரப்புரை நடந்தது. இந்நிலையில், விஜய்யின் இரண்டாம் கட்ட பரப்புரை நாளை (செப். 20) நடைபெற இருக்கிறது. நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இந்த பரப்புரை நடைபெற உள்ளது.
நாகையில் பரப்புரை
நாகை மாவட்டத்தில், கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் அனுமதி கோரப்பட்டது. இதில், புத்தூர் ரவுண்டானா அருகே காவல்துறை அனுமதி அளித்துள்ளது. புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாட இருக்கிறார்.
திருவாரூரில் பரப்புரை
திருவாரூர் நகராட்சி அருகே நாளை மாலை 3 மணிக்கு விஜய் பேச இருக்கிறார். விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பதையொட்டி, கமலாலயம் குளம் பகுதியில் தடுப்பு அரண்கள், கொடிகள் போன்றவற்றை த.வெ.க.வினர் அமைத்து வருகின்றனர்.
பரப்புரை நேர விபரம்
நாகை: புத்தூர் அண்ணா சிலை அருகே நாளை காலை 11 மணிக்கு விஜய் பரப்புரையை தொடங்க இருக்கிறார்.
திருவாரூர்: திருவாரூர் நகராட்சி அருகே நாளை மாலை 3 மணிக்கு விஜய் பேச இருக்கிறார்.
காவல்துறை நிபந்தனைகள் என்ன?
நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் சில முக்கிய நிபந்தனைகள்:
மதியம் 12:25 முதல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்.
வரவேற்பு அளிக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு-புதுச்சேரி எல்லை என்பதால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
விஜய் பயணம் செய்யும் கேரவன் வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அதன் முன்பாகவோ, பின்பாகவோ இரு சக்கர வாகனம், கார் அல்லது நடந்தோ செல்லக்கூடாது.
விஜய் பயணம் செய்யும் சாலையில் பிரதான இரண்டு கட்சிகள் இருப்பதால், அங்கு பிரச்சினைகள் வராத வண்ணம் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.
பரப்புரையின்போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளாதவாறு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பரப்புரையில் கலந்துகொள்ளும் எவரும் கையில் கம்பு, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது.
பரப்புரை என்பது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது. அப்படி சேதம் ஏற்பட்டால், அந்த கட்சியினரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரயில்வே கேட் இருப்பதால், ரயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
புத்தூர் பகுதியில் உள்ள அண்ணா, பெரியார் சிலை தடுப்புகள் ஆகியவற்றின் மீது ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற சாலைகளிலும் இருபுறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது.
இந்த நிபந்தனைகளுடன், விஜய்யின் இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.