ரமலான் மாதத்தையொட்டி த.வெ.க சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்ற, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் தலையில் தொப்பி முழு வெள்ளை உடையில் பங்கேற்றார்.
ரமலான் மாதத்தையொட்டி த.வெ.க சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் வெள்ளிக்கிழமை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்பதால், த.வெ.க-வில் இருந்து மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு அக்கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் தலையில் தொப்பியுடன் முழு வெள்ளை உடையில் மாலை 5 மணியளவில் வருகை தந்தார். விஜய்யை காண அதிக அளவில் பொதுமக்கள் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் குவிந்தனர். 6 மணியாளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு விஜய் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்த விஜய், தொழுகை செய்து, நோன்பு கஞ்சி அருந்தினார். இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், “மனிதநேயம் சகோதரத்துவத்தை பின்பற்றுவொம். மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம்” என்றார்.
இதையடுத்து, த.வெ.க தலைவர் விஜய், திறந்த வேனில் அங்கே திரண்டிருந்தவர்களை நோக்கி கை அசத்தபடி புறப்பட்டு சென்றார்.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு தவெக சார்பில் மட்டன் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒய்.எம்.சி.ஏ-வில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி காரணமாக ராயப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.