/indian-express-tamil/media/media_files/2025/09/24/tvk-vijay-rally-cuddalore-date-changed-tamil-news-2025-09-24-22-56-40.jpg)
நவம்பர் 22 ஆம் தேதிக்குப் பதில் அக்டோபர் 11 ஆம் தேதி அன்று விஜய் கடலூரில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியினை கடந்த ஆண்டு தொடங்கினார். இதன்பின்னர், கட்சிக் கொடியை அறிமுகம் செய்த அவரது தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 அக்டோபரில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்கள் குறித்து விளக்கினார். மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க கொள்கை எதிரி எனவும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க. அரசியல் எதிரி எனவும் காட்டமாக பேசினார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கடந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. விக்கிரவாண்டியைப் போல் இந்த மாநாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்தனர். இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை நேரடியாக விஜய் விமர்சித்தார். குறிப்பாக தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை விஜய் கடுமையாக சாடியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த அலை அடங்குவதற்குள், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறித்து வைத்து, 'உங்கள் விஜய் நான் வரேன்' எனக் குறிப்பிட்டு தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் விஜய். தனது பரப்புரையை கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய அவர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், 13 ஆம் தேதி அன்று திருச்சி, அரியலூரில் தனது பரப்புரையை மேற்கொண்டார். பெரம்பலூரிலும் பேச திட்டமிட்டிருந்த நிலையில், நேரம் போதாத காரணத்தினால் அவர் உரையாற்றவில்லை.
இதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் தொண்டர்களை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், வருகிற சனிக்கிழமை அன்று நாமக்கலில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டு அனுமதி கடிதத்தை வழங்கி உள்ளனர்.
குறிப்பாக நாமக்கல் மாநகரில் மூன்று இடங்களானது தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேலம் சாலையில் உள்ள கே.எஸ். தியேட்டர், பொய்யேரிகரை மதுரை வீரன் கோவில், பூங்கா சாலை என மூன்று இடங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராசிபுரத்திலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். அங்கு ஆண்டலூர் கேட் பகுதி மற்றும் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜயின் கடலூர் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடலூருக்கு நவம்பர் 22 ஆம் தேதியில் வருகை தர இருந்த நிலையில், தற்போது அவரின் சுற்றுப்பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 22 ஆம் தேதிக்குப் பதில் அக்டோபர் 11 ஆம் தேதி அன்று விஜய் கடலூரில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். கடலூர் தபால் நிலையம், உழவர் சந்தை ஆகிய இடங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.