/indian-express-tamil/media/media_files/2025/09/20/tvk-vijay-rally-nagapattinam-speech-attack-mk-stalin-dmk-govt-tamil-news-2025-09-20-15-00-27.jpg)
"சி.எம் சார், என்ன எங்களை மிரட்டி பார்க்கிறீர்களா? நேரடியாகவே கேட்கிறேன். அதற்கு விஜய் ஆளல்ல, நாம ஆள் இல்ல சார், என்ன செஞ்சிடுவீங்க?" என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார். அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இன்று (செப்.20) நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய், சொகுசு காரில் நாகை, திருவாரூர் மாவட்ட எல்லைக்கு சென்றடைந்தார். அம்மையப்பன் நகரில் நிறுத்தப்பட்டிருந்த தமது பிரச்சார வாகனத்தில் பயணித்த விஜய் நாகை புத்தூர் அண்ணா சிலையை நண்பகல் 1.30 மணிக்கு சென்றடைந்தார்.
கடந்த 2011 நாகையில் மீனவர்களுக்காக தமது ரசிகர் மன்றம் மூலம் போராட்டம் நடத்திய விஜய், 14 ஆண்டுகள் கழித்து இன்று தி.மு.க கோட்டையாம், தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான நாகையில் தமது கட்சி சார்பாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். நாகை அண்ணா சிலை அருகில் நின்ற பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்று த.வெ.க தலைவர் விஜய் பேசியதாவது:-
எல்லாருக்கும் வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீர்களா? அண்ணாவுக்கு முதல் வணக்கம், பெரியாருக்கு வணக்கம். இப்ப நான் எந்த மண்ல நின்னுட்டு இருக்கேன் தெரியுமா நாகூர் ஆண்டவர் அன்போடு, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி கடல் தாய்மடியில் இருக்கிற என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான நாகப்பட்டனம் மண்ணிலிருந்து என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும், என்னைக்குமே ஒரு மீனவன் நண்பனா இருக்கிற இந்த விஜய் உடைய அன்பு வணக்கங்கள்.
இந்தக் கப்பலில் இருந்து வந்து இறங்குற எல்லாம் விக்கிறதுக்காக அந்த காலத்துல அந்திக்கடைய எல்லாம் நாகப்பட்டினத்தில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் விவசாயம், விவசாயம், எப்படி பார்த்தாலும் உழைக்கிற மக்கள் இருக்கிற ஊர் தான் நம்ம நாகப்பட்டினம். மத வேறுபாடு இல்லாத அனைவருக்கும் பிடித்து போன மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிற உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் ஸ்பெஷல் வணக்கங்கள்.
தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது ஆக இருக்கக்கூடிய நம் நாகப்பட்டினத்தில் மீன் பதப்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் இல்லை. அது மட்டும் இல்லை, இந்த அடிப்படை வசதிகள் கொண்ட இந்த வீடுகள் எல்லாம் இல்லாம ரொம்ப அதிகமா இந்த குடிசை பகுதிகள் இருக்கிற ஊர் தான் இந்த நாகப்பட்டினம். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி அப்படி இப்படின்னு இந்த அடுக்கு மொழியில் பேசி பேசி மக்களை ஏமாத்தினது தான் மிச்சம். இலங்கை கடற்படையாள நம்ம நாகப்பட்டினம் மீனவர்கள் தாக்கப்படுவது எப்போது நிற்கும்.
அதுக்கான காரணத்தை பத்தியும் அதுக்கான தீர்வ பத்தியும் நான் மதுரை மாநாட்டில் நான் பேசியிருந்தேன் அது ஒரு தப்பா மீனவர்களுக்காக குரல் கொடுத்திருந்தோ அவங்களோட நிக்கிறது கடமை உரிமை, இதே நாகப்பட்டினத்தில் பிப்ரவரி மாதத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம். இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்னும் புதுசல்ல கண்ணா. எப்பவோ எப்பவோ வந்தாச்சு. என்ன ஒன்னு அன்னைக்கு விஜய் மக்கள் இயக்கத்தோடு களத்தில் இருந்தோம், இப்பொழுது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியா களத்தில் வந்து நிற்கின்றோம். மீனவர்களுக்காக குரல் கொடுக்கிற இதே சம்பவத்தில் நமது தொப்புள் கொடி உறவுகளான குரல் கொடுப்பது நம்முடைய கடமை இல்லையா. ஈழத் தமிழர்களுடைய கனவுகளும் அவர்களது வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். மீனவர்களோடு உயிர் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களின் வாழ்க்கையும் முக்கியம்.
ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு கடிதம் எழுதிவிட்டு கபட நாடகம் எழுதிட்டு சும்மா ஒக்காந்து இருக்குறதுக்கு நாம ஒன்னும் திமுக அரசு அல்ல. அதேபோல் பாஜகவையும் சாடி பேசினார் விஜய். சரி இப்ப நம்ம நாகப்பட்டினம் ஏரியாவுக்கு வருவோம். இங்கு இருக்கின்ற இறால் பண்ணைகளை மேம்படுத்த முறைப்படுத்த வேண்டும், மீனவர்கள் விவசாயம் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்போம். அலையாத்தி காடுகளை அழிப்பதை தடுத்து நிறுத்தி மீன் சம்பந்தமான எந்த தொழிற்சாலையும் அமைக்கலாம் மெரைன் காலேஜ் கொண்டு வந்தாங்களா, அட்லீஸ்ட் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிற மாதிரி தொழில் வளத்தியாவது பெருக்கலாம்.
அதையாவது செஞ்சாங்களா? ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்து அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு சி.எம் அவர்கள் சிரிச்சுக்கிட்டே சொல்லுவாரு, சி.எம் சார் மனுச தொட்டு சொல்லுங்க வெளிநாட்டு முதலீடா இல்ல வெளிநாட்டில் முதலீடா, ஒட்டுமொத்த தமிழகத்திற்கு முதலீடா? அல்லது உங்க குடும்ப முதலீடு வெளிநாட்டுக்கு போகிறதா?
வேளாங்கண்ணி நாகூர் கோடியக்கரை இங்கு இருக்கிற டூரிஸ்ட் பிளேஸ் எல்லாம் கொஞ்சம் நல்லா டெவலப் பண்ணலாம். பண்ணினா என்ன குறைஞ்சா போய்விடுவீர்கள். வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி செய்வதற்கு வசதியை செஞ்சு கொடுக்கலாம். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பாக்குற டாக்டரே இல்லையாம், நாகப்பட்டினம் புது பஸ் ஸ்டாண்ட், நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் வேலைகளை சீக்கிரமா முடிச்சு வைக்கலாம் முடிச்சாங்களா, இல்லையே. ஸ்டீல் ரோலிங் மில் ரயில் பெட்டி தயாரிக்கிற தொழிற்சாலை மூடிட்டாங்க.
தஞ்சாவூர் டு நாகப்பட்டினம் நெடுஞ்சாலை வேலை பல வருஷமா நடக்குது இன்னும் முடிச்ச பாடை காணும். நாகையில் அடிக்கடி மழை பெய்யும், இதனால் விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. நெல்லு முட்டை மழையில் நனைவதற்கு ஒரு குடோன் செய்து கொடுத்தார்களா, செஞ்சாங்களா. போன வாரம் திருச்சி அரியலூர் சென்றேன். பெரம்பலூர் செல்ல முடியவில்லை. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளால் பெரம்பலூரில் பேச முடியவில்லை. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்குறேன். சீக்கிரமாக உங்கள தேடி நான் வருவேன்.
இந்த பிளான் இந்த ஷெட்யூல் போட்டதுக்கு அப்புறம் அது என்னப்பா சனிக்கிழமை சனிக்கிழமை சனிக்கிழமை அப்படி என்று ஒன்று ஸ்டார்ட் ஆச்சு. அது ஒன்னும் இல்ல உங்கள் வேலைகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே சனிக்கிழமை இந்த பிளானை ஏற்பாடு செய்து, உங்களுக்கு லீவு நாட்களில் வரணும் என்பதே பிளான். அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஓய்வு நாட்களை சாய்ஸ் செய்தேன். மக்களை தொண்டர்களை சந்திக்க எத்தனை கட்டுப்பாடுகள். சொத்தையான காரணங்களை தெரிவிக்கின்றனர்.
நான் பேசுவதே மூன்று நிமிடம் தான். பேசுவதற்கு கூட கட்டுப்பாடு, திருச்சியில ஸ்பீக்கருக்கு போகக்கூடிய ஒயர் கட்டு, அரியலூரில் நான் பேசும் போது பவர் கட்டு. உதாரணமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் அல்லது பிரதமர் மோடி போன்ற தலைவர்கள் வரும்போது இது மாதிரி கண்டிஷன் எல்லாம் போடுவீங்களா? இது மாதிரி பவர் கட் பண்ணுவீங்களா? இந்த மாதிரி ஒயர் கட் பண்ணுவீங்களா? கொஞ்சம் கட் பண்ணிதான் பாருங்களேன். முடியாதுல்ல உங்க பேஸ்மெண்ட் அதிரும் இல்ல, நீங்க பா.ஜ.க-வுடன் மறைமுக உறவுக்காரர் தானே.
இதெல்லாம் கடந்து ஒரு புது கட்டுப்பாடு நாநான் பஸ்சுக்கு உள்ளேயே இருக்கணுமா, பஸ்சை விட்டு வெளில வர கூடாதாம், என்னையா கட்டுப்பாடு மக்களை பார்த்து சிரிக்காத மக்களை பார்த்து கையசைக்காத இப்படி எல்லாம் கட்டுப்பாடு சொல்வதற்கு செம காமெடியா இருக்குங்க,
சி.எம் சார், என்ன எங்களை மிரட்டி பார்க்கிறீர்களா? நேரடியாகவே கேட்கிறேன். அதற்கு விஜய் ஆளல்ல, நாம ஆள் இல்ல சார், என்ன செஞ்சிடுவீங்க, கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு, குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தா, சொந்தமா உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும். மக்கள் வந்து நிம்மதியா ஃப்ரீயா நின்னு பார்க்கிறதுக்கு ஒரு இடம் அதுக்கு ஒரு பர்மிஷன் கேட்கிறோம், மக்கள் நெருக்கடி உள்ள இடத்தை எங்களுக்கு செலக்ட் பண்ணி தரீங்க உங்க எண்ணம் தான் என்ன சார், நான் பொதுமக்களை பார்க்க கூடாது பேசக்கூடாது குறைகளை கேட்கக்கூடாது அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது என்ன தான் சார் உங்க பிளான்.
நான் சாதாரண தமிழ்நாட்டு மண்ணோட தமிழ் மக்களோட சொந்தக்காரன, என் மக்களை என் சொந்தங்களை என் குடும்பத்தினரை நான் சந்திக்கப் போனால் நீங்க என்ன செய்வீங்க அப்பயும் கட்டுப்பாடு போடுவீங்களா? இந்த அடக்குமுறை அராஜகத்திற்கு நான் ஒன்றும் தனி ஆள் இல்லை மக்களுடைய பிரதிநிதி, மாபெரும் இளைஞர் இயக்கத்தின் தலைவன், மாபெரும் பெண்கள் சக்தியின் துணைவன் நான். 2026ல இரண்டே இரண்டு கட்சி கூட தான் போட்டி ஒன்னு தி.மு.க இன்னொன்னு டி.வி.கே.
இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா எலக்சனை சந்திக்க வாங்க சார், பாத்துடலாம் சார்
கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு குடும்பத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் நீங்களா தமிழ்நாட்டில ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கிற நானா, இந்த விஜயா பார்த்துக் கொள்வோம் சார். இனிமேல் தடைகள் எல்லாம் போட்டால் நான் மக்களையே நேரில் சந்தித்து பேசுகிறேன் பொதுமக்களிடமே அனுமதி வாங்கிக் கொள்கிறேன்.
உங்களிடம் ஏன் நான் வாங்க வேண்டும். இப்படி தடையா போடுறாங்களே திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரணுமா, உங்க நல்லதுக்காக, நம்ம உங்க டி.வி.கே ஆட்சி அமையனுமா. தொண்டர்கள் ஆம் என உயர குரல் எழுப்பினர். ஏம்பா நான்தான் அப்பவே சொன்னேன்ல பாசமா கூப்டா அவருக்கு பிடிக்காது. மீண்டும் சொல்கிறேன் 2026 இல் இருவருக்கு இடையே தான் போட்டி ஒன்று தி.மு.க இரண்டாவது டி.வி.கே.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாகையில் பிரசாரத்தை முடித்து விட்டு சிக்கல், கீழ்வேளூர் பைபாஸ் வழியாக திருவாரூர் வரும் விஜய். திருவாரூர் தெற்கு வீதியில் பிரசாரம் செய்கிறார். மதியம் 3 மணி முதல் 5 மணி வரை அவர் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். திருவாரூரில் பிரசாரம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு விஜய் சென்னை செல்கிறார்.
முன்னதாக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடிய பகுதிகளில் திமுகவின் நான்கு ஆண்டுகால சாதனை விளக்க போஸ்டர்கள் நாகை திருவாரூர் மாவட்டங்களில் திமுக சார்பில் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.