/indian-express-tamil/media/media_files/2025/10/08/vijay-visit-karur-2025-10-08-14-55-59.jpg)
டி.ஜி.பி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்டிருக்கிறோம் என்று தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 27-ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் பலியாகினர். இந்தத் துயரச் சம்பவத்தின் சுவடுகள் மெல்ல, மெல்ல மறைய ஆரம்பித்திருத்தாலும் அதனால் எழுந்த அரசியல் சர்ச்சைகள் இன்னும் அடங்கியபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அது புதுப்புது பரிணாமம் எடுத்துக் கொண்டிருக்கிறது.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார்.
கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டி.ஜி.பி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டி.ஜி.பி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்டிருக்கிறோம் என்று தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விஜய் வீடியோ கால் பேசும்போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக கரூரில் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீங்கள் தைரியமாக இருங்கள். தொடர்ந்து போராடுங்கள். என்று அவருக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக டி.ஜி.பி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டி.ஜி.பி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
முன்னதாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தீக்ஷிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால், யாஷ் எஸ் விஜய் ஆகியோர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "மாநில காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து தவெக சார்பில் ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகளைக் கொண்டே விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாரபட்சமாக செயல்படுகிறது.
'சம்பவ இடத்தில் இருந்து கட்சித் தலைவர் விஜய் தப்பி ஓடிவிட்டார்' என்றும், 'நடந்த சம்பவத்துக்கு விஜய் வருத்தம் தெரிவிக்கவில்லை' என்றும் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் ஏற்கனவே விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. தவெக பேரணியில் பிரச்சினையை உருவாக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி நடந்திருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்ரதவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.