நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று (அக்.27) நடைபெற்றது. இதில் தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகளை அறிமுகம் செய்து பேசினார். முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டியும், விமர்சித்தும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உதயமாகி இருக்கிறது. விஜய் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சில நிகழ்வுகள் நடந்ததற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உதாரணத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. பேசுவதற்கு முன்னால் தாய் தந்தையரை வணங்கியது. அடையாளத்தை உறுதிப்படுத்தியது. பதநீரை மாநில பானமாக அறிவிப்பேன் என்று கூறியது.
தாக்குதல் அரசியல் இல்லாமல் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பேன் என்று கூறியது பாராட்டுக்குரியது.
இன்று தனது எதிரிகளை அடையாளப்படுத்துகிறேன் என்று கூறி. அரசியல் எதிரி என்று திமுகவை அடையாளப்படுத்தியது வரவேற்கத்தக்கது.
ஊழலை கடுமையாக எதிர்ப்பேன் என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்திற்கு ஆபத்து என்று துணிச்சலாக பிரகடனப்படுத்தியது. மக்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்தும் குடும்ப ஆட்சியின் உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பாஜகவை மறைமுகமாக என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாஜக மக்களை பிளவு படுத்தவில்லை என்ற தங்கள் கொள்கைதான் மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் அனைத்து திட்டங்களும். அனைவருக்கும்... என்ற தாரக மந்திரம்.
நல்ல குடிநீர் கொடுப்போம் என்று கூறுகிறீர்கள் அதுதான் மாண்புமிகு பாரதப் பிரதமரின் ஜல் சக்தி திட்டம் இல்லம் தோறும் நல்ல குடிநீர். முதியவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறீர்கள் பாரதப் பிரதமரின் 70 வயது மருத்துவ காப்பீடுத்திட்டம்.
பசியை போக்கும் என்கிறீர்கள் கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக இலவச தானியம் 5 கிலோ வழங்குகிறார்கள்.
மதச்சார்பின்மை பற்றி கூறுகிறீர்கள்.... சிறுபான்மையினர் 25 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பாஜகவில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறார்கள்.
ஆளுநர்களை நீக்க வேண்டும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாநிலத்திற்கு நல்லது செய்த ஆளுநர்களும் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்பேத்காரை பாராட்டி விட்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் பதவியை அவ்வளவு இலகுவாக நீக்குவேன் என்று சொல்வது சரியல்ல.
தமிழக மாணவர்கள் 14 இலட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள் 7.5 ரிசர்வேஷன் இல்லாமலேயே மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்கள்.
இருமொழிக் கொள்கை ஆதரிக்கிறிரோம் என்று கூறிகிறீர்கள்.தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தினால் அது நல்லது தானே. பாஜகவை பற்றிய நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்களை நான் உங்களுக்கு விளக்க முடியும். அதிகாரப்பகிர்வு என்ற ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கிறீர்கள்.
தாங்கள் மட்டுமே என்ற அதிகார ஆணவத்திற்கு பதிலடி கொடுப்பதாக இருக்கும் நீங்கள் கொள்கை எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் விளக்கங்களைச் சொன்னால் அதை ஒப்புக்கொள்ளக்கூடும்.
உங்கள் அரசியல் எதிரியை மக்கள் நலனுக்காக முன்னெடுத்துச் சென்றால் நல்ல அரசியல் மாற்றத்திற்கு இயக்கம் வித்திடக்கூடும். மக்களுக்கான சேவையை முன்னெடுத்துச் செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“