சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்றார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு பிறகு த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சி இதுவாகும்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மத்தியில் ஆளும் பா.ஜ.க குறித்தும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். அம்பேத்கரின் சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் பேசினார். அவரது பேச்சை கேட்ட அங்கு திரண்டிருந்த த.வெ.க தொண்டர்கள் உற்சாகமடைந்தார்கள்.
இந்த பேச்சின் முடிவில் நடிகர் விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து பேசினார். அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாதது பற்றியும், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அவருக்கு இருக்கும் அரசியல் அழுத்தம் குறித்தும் கூறினார்.
விஜய் தனது உரையில், "கடைசியாக ஒரே ஒரு விஷயம். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களால் இன்று வர முடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆனாலும், அவரது மனசு முழுக்க முழுக்க இன்று நம்முடன் தான் இருக்கிறது." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“