திருநெல்வேலி சாய் விகாஸ் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி. தனது மகன் அஜய்குமாருடன் சென்னையில் இருந்து கடந்த 5-ம் தேதி செங்கோட்டை விரைவு ரயிலில் செங்கோட்டைக்கு பயணம் செய்திருக்கிறார். துபாயில் வேலை செய்யும் தனது கணவரை சென்று பார்த்துவிட்டு திரும்பி வரும்போது 40 சவரன் நகையும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு கறுப்பு நிற ட்ராலி பெட்டியில் தன்னுடைய உடமைகளை வைத்து தனது சீட்டுக்கு கீழே வைத்துக் கொண்டு பயணம் செய்திருக்கிறார்.
Advertisment
அதிகாலையில் செங்கோட்டை சென்று சேர்ந்தபோது தன்னுடைய பெட்டியை தேடியிருக்கிறார். அவரது பெட்டியை காணவில்லை. ரூ.20 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகை அதில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், திருநெல்வேலி இருப்புப்பாதை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவரிடம் விசாரித்த காவலர்கள் அந்த ரயிலில் அவர் பயணித்த முன்பதிவு இருக்கையில் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு அவர் வைத்திருந்த பெட்டி போன்றே கருப்பு நிறத்தில் மற்றொரு ட்ராலி இருந்துள்ளது, ஆனால் அது அவருடையது அல்ல என்று கூறினார். இதையடுத்து திருச்சி இருப்புப்பாதை காவல்துறையினர் டிஎஸ்பி பிரபாகரனுக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.பிரபாகரன் ரயில்வே முன்பதிவு சாட்டினை வாங்கி ஸ்ரீதேவி பயணித்த முன்பதிவு பெட்டியில் உள்ள நபர்கள் குறித்து ஆராய்ந்து ஆய்வு செய்ததோடு ஒவ்வொருவரின் அலைபேசியையும் ஆராய்ந்தார். அவரது விசாரணையில் ஸ்ரீதேவிக்கு அடுத்து சீட்டின் பயணியை கண்டறிந்து அவரை தொடர்புகொண்டபோது, அந்த பெண்ணின் பெயர் லுப்னா நஸ் ரீத் என்பதும் அவர் பட்டுக்கோட்டையில் இறங்கிவிட்டார் என்பதும் தெரியவந்தது.
Advertisment
Advertisements
இதுகுறித்து டி.எஸ்.பி.,பிரபாகரன் திருவாரூர் இருப்புப் பாதை காவல்துறைக்கு தகவல் தர, அவர்கள் பட்டுக்கோட்டையில் சுண்ணாம்புகாரத் தெரு, சீதமாணிக்கம் பிள்ளை நகரில் அவரை கண்டுபிடித்து விசாரித்தனர்.
இதையடுத்து இவரும் கருப்பு நிறத்தில் ட்ராலி வைத்திருந்ததால் இருவரின் ட்ராலியும் மாற்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதேவியை பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலையில் வரவழைத்து, பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் முன்னிலையில் இருவரும் தங்கள் பெட்டிகளை மாற்றி எடுத்துக் கொண்டு சரிபார்த்தனர்.
ஸ்ரீதேவி கொண்டு வந்த நகைகள் கொண்ட பெட்டி லுப்னா நஸ் ரீத் வீட்டிற்கு சென்றாலும் அதில் ஒரு துரும்புக்கூட மிஸ் ஆகாமல் அப்படியே இருந்ததை கண்டு அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஸ்ரீதேவி நஸ் ரீத் மற்றும் காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். காவல்துறையினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி: சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“