டி.வி.எஸ். தலைவர் வேணு சீனிவாசன் மீது என்ன புகார்? சிலை கடத்தல் வழக்குகளில் ஷாக்!

வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Venu Srinivasan got Relief from Arrest: டி.வி.எஸ். நிறுவன தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனினும் அவர் மீதான புகார்களால் ஆலய புரவலர்கள் பலரும் அதிர்ந்து கிடக்கிறார்கள்.

டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன். இவர், சென்னை மீது மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயமானது தொடர்பான புகாரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு வேணு சீனிவாசன் தாக்கல் செய்த மனு அடிப்படையில் அவரை கைது செய்ய 6 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது!

கபாலீஸ்வரர் கோவில் சிலை மாயம்: டி.வி.எஸ். நிறுவன தலைவரை கைது செய்ய ஐகோர்ட் தடை! To Read, Click Here

வேணு சீனிவாசன் தலைமைப் பொறுப்பை வகிக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழகம், கர்நாடகா, கேரளாவில் 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. 2004ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அமைக்கப்பட்ட திருப்பணிக் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர்!

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவனுக்கு பூஜை செய்யும் பார்வதி, மயில் ரூபத்தில் இருக்கும் சிலை உண்டு. 2004-ம் ஆண்டு திருப்பணியின்போது அந்த சிலை பழுது நீக்குவதற்காக அகற்றப்பட்டது. அதன்பிறகு மீண்டும் வைக்கப்பட்ட சிலை ஒரிஜினல் அல்ல என கூறப்படுகிறது.

மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் என்ற முறையிலும், 2015 ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது திருப்பணிக்குழு தலைவர் என்ற முறையிலும் அங்கு சீரமைப்புப் பணிகள் செய்திருக்கிறார். இதற்கிடையே  மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி, புணரமைப்பு தொடர்பான வழக்கில் இவரை காவல் துறையினர் சேர்த்துள்ளதாக யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்யக் கூடும் என்பதாலேயே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு மீதான உத்தரவில், வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வார காலத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர் நீதிபதிகள்! இந்த வழக்கின் விசாரணையையும் 6 வார காலத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

வேணு சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், ‘நிஜமாகவே வழக்குப் பதிவு செய்திருக்கிறார்களா? என்ன வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்? என்பவை குறித்து எங்களுக்கு தகவல் இல்லை. எனினும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தனது மனுவில் நீதிமன்றத்தில் கூறியிருப்பதால், முன் எச்சரிக்கையாக முன் ஜாமீன் கேட்டோம்’ என்றார்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் கோவில் திருப்பணிக் கமிட்டி தலைவர்களாக பெரும் தொழில் அதிபர்களே பொறுப்பேற்று செய்கிறார்கள். மொத்த தொகையையும் அறநிலையத்துறை செய்வது சாத்தியம் இல்லை என்பதால், தொழில் அதிபர்களை இந்தப் பணிகளில் இறக்குகின்றனர்.

தொழில் அதிபர்கள் பலரும் கோவில் தொடர்பான பணிகளை மன திருப்திக்காகவும், ஆன்மீக நாட்டத்திலும் எடுத்துச் செய்வது உண்டு. தற்போது பெரும் தொழில் அதிபரான வேணு சீனிவாசனுக்கு உருவாகியிருக்கும் சிக்கல் காரணமாக, கோவில் திருப்பணிகளை தொழில் அதிபர்கள் ஏற்றுச் செய்வதே இனி கேள்விக் குறியாகிவிடும் என அறநிலையத்துறை வட்டாரத்திலேயே ஆதங்கப்படுகிறார்கள்.

 

 

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close