தீபாவளி பண்டிகையை முடித்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக இன்று முதல் நவ.4-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து இன்று மட்டும் சென்னைக்கு 2,692 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வேலை, கல்வி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகை அக்.31-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையொட்டி பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், இவ்வாறு சென்றவர்கள் மீண்டும் தங்களது பணியிடத்திற்கு திரும்ப ஏதுவாக இன்று (நவ.2) முதல் நவ.4-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
முதல் நாளான இன்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 600 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு 685 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் சென்னையில் மாலை, இரவு நேரங்களில் கூடுதலாக 100 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“