தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை, பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை,
1. கொள்கைகள், கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்றும் தீர்மானம்,
2. கொள்கை திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்,
3. மதசார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றி விளக்க தீர்மானம்,
4. ஜனநாயக கொள்கை தீர்மானம்,
5. பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்,
6. சமூகநீதி கொள்கை தீர்மானம்,
7. மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம்,
8. விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்,
9.கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து தொடங்க கூறும் தீர்மானம்,
10. ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானம்,
11. மொழிக் கொள்கை தீர்மானம்
12. மக்கள் மீது நிதிச் சுமை திணிப்பு சார்ந்த தீர்மானம்,
13. சட்டம் ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்,
14. மின்சார கட்டணத்தை மாற்றி அமைக்க தீர்மானம்,
15. மது கடைகளை மூட வலியுறுத்தும் கொள்கை தீர்மானம்,
16. உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்,
17. தமிழ்நாட்டின் தொன்மை பெருமை பாதுகாப்பு தீர்மானம்,
18. விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம்,
19. கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தி தீர்மானம்,
20. முதியோர் நல்வாழ்வை உறுதி செய்ய தீர்மானம்,
21. இயற்கை வள பாதுகாப்பு கொள்கை தீர்மானம்,
22. இஸ்லாமியர் உரிமை தீர்மானம்,
23. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்,
24. தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்,
25. ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம் மற்றும்
26. இரங்கல் தீர்மானம் என்பன உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
இவற்றில் மிக முக்கியமாக மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டிக்கும் விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் எனக் கூறும் திமுக அரசை மக்கள் நம்ப மாட்டார்கள் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநில அரசை நேரடியாக தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்திருந்தது.
மேலும், மகளிர் உரிமை தொகை, பரிசு தொகுப்பு என ஒரு புறம் அறிவித்துவிட்டு, மற்றொரு புறம் மதுக்கடைகளை திறந்து அதன் மூலம் அரசுக்கு வருவாயை பெறுக்குவது ஏற்புடையது அல்ல என மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல், திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர், தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு எனக் கூறினர், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை ஏற்படுத்தினர் என பாஜகவை விமர்சனம் செய்யும் விதமான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு பதிலாக, மூன்றாவது கொள்கையை திணிக்க முயலும் ஒன்றிய அரசின் கனவு நிறைவேறாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது போன்ற தீர்மானங்கள் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. எனினும், ஆளும் அரசின் தவறை சுட்டிக்காட்டுவது போல், அவர்களின் நலத்திட்டங்களை ஆதரிக்கும் விதமாகவும் த.வெ.க செயல்படும் எனக் கூறி, தகைசால் விருது வழங்கும் தமிழக அரசை வரவேற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த தீர்மானங்களை காணும் போது, பா.ஜ.க.வை தி.மு.க குறை கூறும் விஷயங்கள் மற்றும் தி.மு.க.வை பா.ஜ.க குறை கூறும் விஷயங்களை ஒன்றாக அமைத்து வெளியிடப்பட்டிருப்பது போன்ற தோற்றமளிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.