திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச் ஏ பி பி தொழிற்சாலை பகுதியில் உள்ளது கேந்திரிய வித்யாலயா பள்ளி.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி வாகனத்தில் மாத்தூர் அருகே குமாரமங்கலம் வடுகப்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது குறுகிய சாலையில் வளைவில் திரும்பும் பொழுது வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. வேனில் ஒன்று, இரண்டு, நான்காம், ஐந்தாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்கள் 29 பேர் பயணம் செய்தனர். வேன் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற கொண்டு சென்றனர்.
குழந்தைகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேனை ஓட்டி வந்த பக்ருதீன் மற்றும் வேன் கிளீனர் இமாம் இவ்விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.வேன் ஒப்பந்த அடிப்படையில் பள்ளிக்கு இயங்குவதாகவும் மேலும் ஓட்டுநர் வேனை வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்