கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 34,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், தற்போது ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 13,332 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 112.71 அடியாகவும், நீர் இருப்பு 82.31 டிஎம்சி ஆகவும் இருந்தது.
முன்னதாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் 60,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க. சண்முகவடிவேல்