Twins top school amid poverty, sick mom : மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வரும் நபர் ராதாகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் மாலா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு அடுத்ததாக இரட்டையர்கள் பிறந்துள்ளனர். மீனாட்சி மற்றும் சுந்தரராஜ பெருமாளும் இரட்டைப் பிறவிகள். மீனாட்சி இந்திய நாடார் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சுந்தரராஜ பெருமாள் இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார்.
மேலும் படிக்க : உலகின் பிரபலமான மூன்றாவது தலைவர் நரேந்திர மோடி; டிவிட்டரில் சாதனை
சுந்தரராஜ பெருமாளுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதே போன்று மீனாட்சிக்கு கலை அறிவியல் கல்லூரியில் படித்து ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற கனவு உள்ளது. ஆனால் ராதாகிருஷ்ணனின் நிலையே விவரிக்க இயலாத வண்ணம் மிகவும் துயரம் கொண்டதாக இருக்கிறது. ராதாகிருஷ்ணன் தேநீர் கடை ஒன்றில் பணியாற்றுகிறார். அவருடைய மனைவிக்கோ நீண்ட நாள் மனநல பாதிப்பு உள்ளது. ராதாகிருஷ்ணனின் வருமானம் தன்னுடைய மனைவியின் மருத்துவ செலவிற்கே போதாக்குறையாக உள்ளது. இதனால் தன் பிள்ளைகளின் கனவினை நிறைவேற்றுவது குறித்து யோசித்து கலங்கி நிற்கிறார்.
ஆனால் இந்த இளம் மாணவர்களோ 10ம் வகுப்பில் சாதனை செய்தது போன்றே தற்போதும் பெரும் சாதனையை 12ம் வகுப்பு தேர்வில் நிகழ்த்தியுள்ளனர். கடந்த வாரம் வெளியான தேர்வு முடிவுகளில் மீனாட்சி 600க்கு 559 மதிப்பெண்களும், சுந்தரராஜ பெருமாள் 532 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். புத்தகங்கள் வைக்க கூட இடம் இல்லாதம் வீடு, மழை பெய்தால் ஒழுகும் என்ற நிலையிலும் கூட இந்த மாணவர்களின் சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil