Twitter splits Stalin postman comment about Governor: கவர்னரிடம் எதிர்ப்பார்ப்பது போஸ்ட்மேன் வேலையை மட்டுமே என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது ட்விட்டரில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நீட் உள்ளிட்ட தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காதததால் ஆளுனருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்தநிலையில், திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட, நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநரிடம் எதிர்பார்ப்பது சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் ‘போஸ்ட் மேன்’ வேலையை மட்டுமே என்று விமர்சித்துப் பேசினார்.
முதல்வரின் இந்த பேச்சு ட்விட்டரில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ட்விட்டரில் பலரும் முதலவரின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
கவர்னர் மத்திய அரசின் ஏஜெண்ட், வேலைக்காரர், மாநில அரசின் வேலைகளையும் அவர் செய்தாக வேண்டும், இது மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட அரசு, இவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டும், ஒன்றிய அரசுக்கும், மாநில மக்களின் அரசுவுக்கும் இவர் போஸ்ட்மேன் மட்டுமே, என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பலரும் கவர்னர் போஸ்ட்மேன் மட்டுமே என பதிவிட்டு வருகின்றனர்.
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளுநர் தபால்காரர் அல்ல. இந்தியக் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்” என சுப்பிரமணியன் சுவாமி எதிர்வினையாற்றியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர்வாசி, “யாரு தபால்காரர். அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் ஆளுநரிடம் வழங்குகிறது. மாநில சட்டப் பேரவையில் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் முதல்வரை ஆளுநர் நியமிக்கிறார்.” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: தமிழக சட்டமன்ற மசோதாவுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வரவேற்பு
இன்னொருவர், “சென்னாரெட்டி கிட்ட மனு கொடுத்தது யாரு, ஆட்சி டிஸ்மிஸ் செய்ய கூறி ரோசய்யாவிடம் மனு கொடுத்தது யாரு! ஆட்சி டிஸ்மிஸ் செய்ய கூறி வித்தியாசாகரிடம் மனு கொடுத்தது! ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை விடுத்தது பன்வாரிலாலிடம் மனு கொடுத்தது! அப்பொழுது எல்லாம் போஸ்ட்மேன் தான் கவர்னர் என்று தெரியல” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “மாநில நிர்வாகம் உண்மையான அதிகாரம் பெற்றவர் கவர்னர் தான் கவர்னரின் கையெழுத்து இல்லாமல் உங்களால் மாநிலத்தில் எந்த நிர்வாக செயல்படும் நடைபெறது நீங்கள் இந்த நாட்டிற்கு அரசியல் அமைப்பை உருவாக்கி கொடுத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களை இதன் மூலம் அவமானம் செய்து வருகிறீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர், “தமிழ்நாடு என்னும் வீட்டிற்கு ஓனர் ஆளுநர். நாம் வாடகைக்கு குடியிருப்போர் நாம் எத்தனை ஆண்டுகள் குடி இருக்கிறோமோ அத்தனை ஆண்டு காலமும் ஓனர் ஆளுநர். வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று நாம் செயல்பட வேண்டும். வீட்டின் சுவருக்கு வெள்ளை அடித்தாலும் பூச்செடிகள் படங்கள் வைத்தாலும் அனுமதி பெற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil